பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 ௧௩௪

முன்னுரை 


அதன் பின் வாயு (காற்று) தோன்றியதாம்! என்னே கற்பனை! அறிவியல் கற்ற அனைவரும் வெட்கித்தலைகுனிய வேண்டிய செய்தி இது! இப்படித்தான், இன்று அறிவியல் கற்ற ஆரியப் பார்ப்பனர்கள் அனைவரும் தலைமேல் வைத்துக் கொண்டாடும் வேதங்கள் அனைத்திலும் சொல்லப் பெற்றிருக்கின்றன! இவ்வேதங்களைத்தாம், தாமே உண்டானவை (ஸ்வயம்பு) என்றும், தொடக்கமும் முடிவும் இல்லாதவை (அநாதி) என்றும், என்றும் இருப்பவை (நித்யம்) என்றும் ஒலிவடிவானவை (ஸ்ருதி) என்றும், அறிவுநூல் (ஸாஸ்த்ரம்), என்றும், கடவுள் வாயிலிருந்து வெளியானவை (ஈஸ்வர வாக்யம்) என்றும், கடவுளால் பிரமதேவனுக்குச் சொல்லப்பெற்று, அவனால் பின்னர் ரிஷிகளுக்குச் சொல்லப்பெற்று பிறகு அவற்றைத் தம் சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்கள் என்றும், அவை இந்த உலகம் அழிந்தாலும் அழியாமல் விந்து (ஒளி வடிவமாய் இருக்குமென்றும், இவை ஒருகாலத்தில் அசுரர் (தமிழர்)களால் திருடிச் செல்லப்பெற்றுப் பிரமனால் அன்னப் பறவை வடிவம் கொண்டு மீட்கப் பெற்றவை என்றும், இன்னும் பலவாறாகவும் இன்றுவரை ஆரியப் பார்ப்பனரால் கூறப்பெற்று வருகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, அவற்றில் படைப்புக் கொள்கை பற்றி மேலும் விளக்கப் பெற்ற செய்திகளையும் நாம் பார்ப்போம்.

'அப்பிரமன், இவ்வாறு, சந்திர சூரியர்களையும் உலகத்தையும் படைத்ததற்குப் பின்னர், உபபிர்மாக்கள் எனப்பெறும் ஒன்பது பிரஜாபதிகளை (மக்கள் தலைவர்களை) உண்டாக்கி, அவர்களைக் கொண்டு உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களையும் உண்டாக்கினான்' என்று கீழ்வருமாறு வண்ணிக்கப்பெறுகிறது.

'அப்பிரஜாபதிகளுள், மரீசி மகனான கசியபன் (காசிபன்) ஒரு பிரஜாபதியாவான். இவனுக்கு தக்ஷன் என்பவனுடைய பதின்மூன்று பெண்களும், வைசவாக்ரன் (வைசியாநரர்) என்பவனின் பெண்கள் இருவரும் ஆகப் பதினைந்து பேரும் மனைவியர் ஆவர்.

அவர்களுள் 'அதிதி' என்பவள் வயிற்றில் பன்னிரு ஆதித்தர் (சூரியர்)களும், தேவர்களும் பிறந்தார்கள்.

- 'திதி' என்பவள் வயிற்றில் தைத்தியர்கள், அசுரர்கள் பிறந்தனர்;

- 'தது' என்பவள் வயிற்றில் தானவர்கள் பிறந்தனர்;

- 'மதி' என்பவள் வயிற்றில் மனிதர்கள் பிறந்தார்கள்:

'சுரபி' என்பவள் வயிற்றில் காமதேனுவும், கந்தர்வர்களும் பிறந்தார்கள். (காமதேனு - பசுக்கூட்டம்).