பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௪௦

முன்னுரை 


பிதுரர்களுக்கும் நிவேதித்துப் புசிக்கிறவன் தூஷிக்கப்படமாட்டான். எக்கியத்திற்காகவே பிரமனால் பசுக்கள் மிருகங்கள், பறவைகள் படைக்கப்பட்டன. ஆதலால் யாகத்தில் செய்யும் கொலைகள் கொலைகளாகமாட்டா. யாகத்தால் தேவர்கள் மகிழ்கிறார்கள்; உலகமெல்லாம் நன்மையடைகிறது; யாகத்தில் உயிர்களைக் கொன்றால் அவை பின்பு உயர்ந்த கதியை அடைகின்றன. ஆதலால் யாகம், சிரார்த்தம் இவற்றில் உயிர்க்கொலை செய்யலாம்; அக் கொலை பாவமாகாது.

இங்ஙனம் யாகத்திற் கொல்லப்பட்ட கொலையைக் கொலை என்று நினைக்கலாகாது. வேதத்தினாலேயே தர்மம் விளங்குவதால், வேதம் கொலை செய்யக் கூறினாலும் அது புண்ணியமாகவே இருக்கும். அதுவே தர்மமாகும்"

– மனு: 5 – 28 முதல் 44 வரை

.

கீழுள்ள மனுவியல் கருத்துகள் இறந்து போனவர்களுக்குப் பிராமணப் புரோகிதர்களைக் கொண்டு நீத்தார் கடன்கள் (சிரார்த்தம் – பிதிர்க்கடன் திதி கொடுத்தல்) பற்றிக் கூறுகின்றன. அவற்றிலும் உயிர்க் கொலையும் புலால் உண்டதும் வலியுறுத்தப்பெறுகின்றன.

'எள்ளு, அரிசி, உளுந்து, கிழங்கு, பழம் இவற்றால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் ஒரு மாதம் வரையில் திருப்தி அடைவார்கள்.

– மனு: 3 – 267.

'ஆமை, மீன் இவற்றின் இறைச்சியால் இரண்டு மாதங்களும், மான் இறைச்சியால் மூன்று மாதங்களும், செம்மறியாட்டின் இறைச்சியால் நான்கு மாதங்களும், பறவைகளின் இறைச்சியால் ஐந்து மாதங்களும், வெள்ளாட்டின் இறைச்சியால் ஆறு மாதங்களும், புள்ளிமான் இறைச்சியால் ஏழு மாதங்களும், கருமான் இறைச்சியால் எட்டு மாதங்களும், கலைமான் இறைச்சியால் ஒன்பது மாதங்களும், முள்ளம்பன்றி, காட்டெருமைக்கடா இவற்றின் இறைச்சியால் பத்து மாதங்களும், முயலிறைச்சியால் பதினொரு மாதங்களும், வார்த்தீசன் என்னும் வெள்ளாட்டின் இறைச்சியால் பன்னிரண்டு மாதங்களும், பிதிரர்கள் திருப்தியடைகின்றார்கள்'.

– மனு: 3 – 268, 269, 270.

'முள்ளுள்ள வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் இறைச்சியால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் அளவற்ற காலம் திருப்தியடைவார்கள்

– மனு: 3 – 27.

'சிரார்த்தத்தில் விதிப்படி, அழைக்கப்பட்ட பிராமணன் இதில் கூறப்பட்ட மாமிசங்களைப் புசிக்காவிட்டால் அவன் இருபத்தொரு பிறப்பு பசுவாகப் பிறப்பான்'