பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௯௦

முன்னுரை - புகழ்புரிதல் என்பது, குடும்பப் பெண் ஒருத்தியை அவள் குடும்பத்தாரும், பெற்றோரும், உற்றோரும், உறவும், நட்பும், ஊரும் போற்றியுரைத்தல். அவ்வாறு போற்றியுரைக்கும்படி வினைபுரிதல். என்னை? அவள் தன் குடும்பப் பெருமைகளைக் கட்டிக் காப்பதும், சிறப்பைப் பிறர் அறியுமாறு குடும்பச் செயல்களில் பாடாற்றுவதும், பொது நலம் பேணும் தன் கணவர்க்குத் துணை நிற்பதும், தோள் தருவதும், அவனின் செவ்விய போக்கிற்கு ஊக்கம் தருவதும், உதவுவதும், மக்களை அறிவறிந்த மக்களாக வளர்த்தெடுப்பதும், அவர்களின் கல்வி முயற்சிக்கு உறுதுணையாக நிற்பதும், தொடக்க நாளில், திருமணத்தின் பொழுது, தன்னைப் பாராட்டி வாழ்த்தியவர்களின் தகைசான்ற சொற் களைக் காத்துக்கொள்வதும் அவளுக்குப் புகழ்தரும் நடைமுறைகளாம். இச்செயல்கள் தன் கணவனைப் பிறர் முன் நிமிர்ந்து நடக்கச் செய்பவை என்பார் நூலாசிரியர் (59).

இவ்விவ்வாறு இயங்குகின்ற ஒரு பெண்ணே தன் குடும்பத்திற்குத் தலைமை தாங்கி இல்லறத் தலைவி என்னும் பெருமை பெறுகிறாள். இவ்வகையில் அவளுக்குற்ற உரிமைகளும் கடமைகளும் ஏராளம். இதுவே தமிழியல், ஆனால், ஆரியவியலில் அவள் ஒரு குடும்ப அடிமை, கணவற்குப் பணிப்பெண்; குடும்பத்தார்க்கு ஏவலாள்; பிள்ளை பெறும் இயந்திரம். இந்நிலைகள் தமிழியலுக்கு ஏலாவாம் என்க.

இத்தகைய தமிழியல் கோட்பாடுகளும் மரபு வழிப்பட்ட நடைமுறைகளுமே இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம் என்னும் இரண்டு அதிகாரங்களிலும் வலியுறுத்தப் பெறுகின்றன; அறிவுறுத்தப் பெறுகின்றன. அவற்றுள் பெண்ணடிமைத்தனம் எங்கும் சொல்லப் பெறவில்லை.

இனி, வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரத்தின கண் பெண்ணிற்குக் 'கற்பு' என்னும் ஒரு கோட்பாடு வலியுறுத்தப் பெறுவதும், 'கொழுநன் தொழுதெழுதல்' என்னும் கணவன் வணக்கச் செயலும் அடிமை நிலையை உணர்த்தவோ எனின், அவை அவ்வாறு இல்லை என்க. என்னை?

'கற்பு' என்னும் சொல் நிறையுடைமை. பெண்ணிற்குக் கற்பிக்கப் பெறுவதோர் ஒழுக்கம். பெரும்பாலும் உடல் வேறுபாடுகளைக் கொண்டே ஆண், பெண் என்று பிரித்துக் கூறப் பெறுகிறது. ஆணின் உடலமைப்பு வேறு பெண்ணின் உடலமைப்பு வேறு. மற்ற வகையில் உணர்வு நிலையில் அதே போன்று சிற்சில வேறுபாடுகள் உண்டு எனினும், அறிவு நிலையிலும் உயிரியல் நிலையிலும் இருவர்க்கும் இயற்கையமைப்பு ஒன்றே இந்நிலைகளை மேலும் சிறிது விளக்குவோம்.

ஓர் ஆண் என்று சொல்லப் பெறுபவனுக்கு உள்ள அனைத்துக்