பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௦௯


பலவகையான இயல்புகளில் திருமணம் செய்து கொள்ளாமையும் ஒன்று என்பதை நாம் அறிவோம். திருமணத்தை 'வரைவு' என்னும் பண்பியல் சொல்லாலும் புலவர்கள் குறிப்பர்.

'வரைவு' என்பது எல்லைப் படல் அடையாளப் படல், ஒரு நிலையில் ஒழுகுதல், உரிமையாதல், 'நிலைப்படல்', முதலிய ஒழுகியல் பொருள்களைத் தரும் சிறந்த சொல்லாகும்.

'வரைதல்' திருமணம் செய்து கொள்ளல். இதுபோலும் அதிகாரப் பெயர் கொண்ட சில பல சொற்களைக் கொண்டே நூலாசிரியராகிய திருவள்ளுவரே இந்நூலின்கண் உள்ள அதிகாரங்களைப் பகுத்தும் பெயர் சூட்டியும் இருப்பர் என்பதை நிலைநாட்டலும் இயலும் என்க. இருப்பினும் நீண்ட நெடிய காலமாற்றங்களாலும், பல்வேறு வகைப் பண்பியல், கொள்கையியல் உள்நுழைவுத் தாக்கங்களாலும், சிற்சில மாறுதல்கள், இவ்வதிகாரப் பெயர்களிலும், பகுப்பு வகுப்புகளிலும், குறள் அடைவுகளிலும் நேர்ந் திருக்கவியலாது அல்லது இல்லை என்று கூறிவிட முடியாது என்க. அது பற்றியும் இம்முன்னுரையின் பின்னுரையின் கண் ஓரளவு ஆயப்பெறும். இது நிற்க.

இங்குக் கூற வந்தது, கழக இலக்கண இலக்கியங்களுள் வரைவு, வரைதல் என்னும் சொற்கள் உண்டேதவிர வரைவில் வரைவின் மகளிர் என்னும் சொல்லாட்சிகள் இல்லை. பல சொற்களைப் போலவே வரைவின் மகளிர் எனும் சொல்லாட்சிம் நூலாசிரியர் படைத்துக் கொண்ட பண்பியல் சொல்லே என்பது தெளியற் பாலது.

திருமணம் ஆகாமல், பல்வேறு ஆண்களுடன் பொருளுக்காகத் தம் உடலை விற்றுப் பிழைக்கும் விலை மகளிர் அன்றும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர்; என்றுமே இருந்து வருவர். இதைத் தடுக்கவோ எடுக்கவோ எவராலுமே எந்த அரசாட்சியாலுமே இயலா தென்க. இருப்பினும் இவற்றின் கொடுமையையும் கடுமையையும் உணர்த்துவது, எடுத்துரைப்பது அறிஞரின், அறநூலாரின் கடனாகும். அவ்வாறு எடுத்துரைக்கும் பொழுது அவ்வேழை, எளிய பெண்டிர்க்கு இழிவு கூறாமல் இருப்பது பெண்மையை மதித்துப் போற்றும் பெருந்தகை நூலாசிரியர்க்கே ஏற்றதும் இயல்வதும் ஆகும் என்க. அத்தகைய நூலாசிரியருள் நம் திருவள்ளுவப் பெருந்தகை, கற்றாருள் கற்றார், சான்றோருள் சான்றோர், பண்பாளருள் பண்பாளர் ஆகலின், அக்கொடு வினையாற்றும் விலைமகளிரை, பொருட்பெண்டிரை, பொதுப் பெண்டிரைக்கூட, இழிவுப்படுத்திக் கூறாமல், பண்புமணம் கமழும் இனிய சொற்களால், 'வரைவின் மகளிர்' திருமணம் செய்து கொள்ளாத பெண்டிர் என்று போற்றியே சொன்னார் எனின், பிற உயர்வொழுக்கப் பெண்டிரைச் சொல்லாலோ கருத்தாலோ இழித்தும் பழித்தும் கூறுவரோ என்று எண்ணிப்