பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௧௩


பட்டிருக்க வேண்டும் அவர் அவற்றுள் ஓர் அரும்பாடு அவர்தம் திருக்குறள் நூல்.

--புலவர் க. நடேசனார் -- திருக்குறள் திறவு -2 (1955) -நீத்தார் பெருமை)


6. நூற் சிறப்பியல்கள்

உலகப் பேரற நூலாம் 'திருக்குறளின்' பொதுவான சிறப்புத்தன்மைகளைப் பற்றி முன்னைய தலைப்பிலேயே புற நிலையாக நிறைய சொல்லப்பெற்றுள்ளன. இருப்பினும், இதில், அதன் அகநிலையாக உள்ள நூற்சிறப்பியல்கள் பற்றிச் சில கூறியாகல் வேண்டும்.

திருக்குறள் பற்றி இவ்வுலகிலுள்ள எந்த ஓர் அறிஞர் மதிப்பீடு செய்வதாயினும், அதற்கிணையாக வேறு எந்த ஒரு நூலையும் குறிப்பிட்டுச் சொல்வது மிகவும் அரிதான செயலாகும். அந்த அளவுக்கு அந்நூல், தன் அமைப்பிலும் சரி, உள்ளிட்டளவிலும் சரி, அதன் வகுமுறை, தொகு முறைகளிலும் சரி, அதன் கருத்து வெளிப்பாட்டிலும் சரி, இவ்வுலகின்கண் இதுவரை தோன்றியுள்ள மிகச் சிறந்த அனைத்து நூல்களினும் மிக மேலாகவே சிறந்து விளங்குகின்றது. மக்கள் உயிர் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனைக் கூறுகளையும் கொண்டுள்ள இது போலும் ஒரு நூலை உலகம் இனிமேல் காணமுடியுமா என்பது ஐயமே!

முதற்கண் வடநூலார் மக்கள் வாழ்வியல் முயற்சிகளைத் தர்மம், அர்த்தந்ம், காமம், மோட்சம் எனும் நான்கு கூறுகளாகவே பகுத்துக் கூறுகின்றனர். இவற்றை மறுத்துக்கூறும் நோக்கில்தான், திருவள்ளுவப் பேராசான் அறம், பொருள், இன்பம் - என்னும் மூன்று கூறுகளையே கொண்டார் என்க.

இருப்பினும், தமிழர் அறம், வடவர் தர்மம் ஆகாது. அதேபோல் தமிழர் பொருள் வேறு; வடவர் அர்த்தம் வேறு தமிழர் காமம் - காதலின்பம் - வேறு வடவர்தம் காமவின்பம் வேறு. தமிழர் காமம் ஆண், பெண் மனவுணர்வு பற்றியது. வடவர் காமம் உடலியலின் ஒரு கூறான பாலியல் பற்றியது.உண்மை இவ்வாறிருக்க, ஆரியப் பார்ப்பனரும், பழுத்த வைத்திக நெறியாளளருமாகிய பரிமேலழகர், காமத்துப்பால் முன்னுரையில், "இவர் (திருவள்ளுவர்) பொருட் பாகுபாட்டினை, அறம், பொருள், இன்பம் என வடநூல் வழக்குப் பற்றி ஓதுதலான்” என்று கூறுவார்.