பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௧௫


'மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும்' --தொல் 1591.

இவ்வகையில் மரபே வழக்காகிறது. அதுவும் கல்லா மக்கள் இவ்வழக்கத்தை அவ்வப்பொழுது கைநெகிழவிட்டு விடுவார்களாகையால், வழக்கம் எனும் அனைத்து மரபு நிலைகளும் கற்றுணர்ந்த (உயர்ந்த)வர்களின் நடைமுறையே ஆகும் என்பதும் தொல்காப்பியம்.

'வழக்குஎனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாகல் ஆன' --தொல் 1592.

அதனால், ஒரு நூல், மரபு நிலை திரியா மாட்சியவாகி (தொல்: 1593)இருத்தல் வேண்டும். அவ்வகையில் திருக்குறள் தொன்மைத் தமிழ்ச் சான்றோர்தம் மொழி, இனம், பண்பாடு, நாகரிகம், கலை முதலிய அனைத்து நிலைகளிலும் தமிழ் மரபியல் நிலைக்கு ஏற்ப அமைந்த மிகச் சிறந்த நூலாக உள்ளது என்பது, தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை தருவதாகும்.

அடுத்து, திருக்குறள் என்பது, இதன் அனைத்து அமைப்பு நிலையிலும், இது தோன்றுவதற்கு முன்னர், இது போல் எதுவும் இல்லை என்னும் நிலையிலும், இதுவே முதல் நூலாகும் என்பது தெளியப் பெற்ற உண்மையாகும் என்பதும் அறியத் தக்கது. இனி, இந்நூலைப் போலவே இதன் ஆசிரியராகிய திருவள்ளுவப் பேராசானும், தமிழினத்தின் கண் அவருக்கு முன்னும் பின்னும், இன்னும், இன்றும், இனியும், இருந்த, இருக்கப்போகின்ற பேரறிவுப் பெருந்தகையர்க்குள், மிகச் சிறந்த, தனித் தன்மை வாய்ந்த பேராற்றல் மிக்க ஒப்பாரும் மிக்காரும் அற்ற தனி முதல்வர் ஆவர் என்க. என்னை?

வினையின் நீங்கி விள்ங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் --தொல் 1594

- என்றார் ஆகலின் இனி, ஒரு நூல் எவ்வகையில் அமைதல் வேண்டும் என்பதற்கும் தொல்காப்பியம் இலக்கணம் வகுத்துள்ளது. அஃது காலத்தால், இடத்தால், இனத்தால் மாறுபாடுகளுக்கு உட்படாத, பொய்த்துப் போகாத உண்மையான உறுதிப் பொருள்களைக் கொண்டு, சான்றோர் கூறிய பத்துக் குற்றங்களும் இல்லாததாகி, முப்பத்திரண்டு உத்திகளுடனும் (இவற்றின் விளக்கங்களைத் தொல்காப்பியத்துள் கண்டு கொள்க) மக்கள் அனைவரும் உய்ய வேண்டும் என்னும் நேர்மையான மனவுணர்வுடன் எழுதப்பெற்றிருத்தல் வேண்டும் என்பதாகும்.