பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௨௨

முன்னுரை 


அவ்வறம், பொருள், இன்பம் என்னும் பெரும் பிரிவுக் கூறுகளுக்குப் பகுப்பு என்னும் பொருள்தரும் பால் என்னும் சொல்லை இணைத்து, இந்நூலை முப்பாலாக ஆக்கிக் கொண்டு, அப் பால் பிரிவுகளினும் உள்ளடங்கும் ஒருசார்பு நின்ற பெருங்கூறுகளை இயல்கள் என்று பிரித்து, அவ்வியல்களினும் பிரித்தொடுக்கும் சிறு கூறுகளை அதிகாரங்கள் என்று கூறிட்டுக்கொண்டு, அவ்வதிகாரங்களுக்குள், தாம் எண்ணித் தேர்ந்த இவ்வுலகியலுக்கு மிகத் தேவையான கருத்துகளை, முன்பின் என்று நிரல் நிறைப்படுத்தி, அவற்றைப், பாக்களுள் மிகமிகச் சிறிய பாவாகிய குறட்பாவின்வழிக் கூறுதல் வேண்டுமென்றும், அப்பொழுதுதான் அவை கற்போர்க்கு எளிதாகவும், கவனத்தில் கொள்ள இயல்வதாகவும், எடுத்துக் கூறவும் மடுத்துக் கேட்கவும் சுவையானதாகவும், மனச்சலிப்பையும் அறிவுக் கனத்தையும் உண்டாக்காமல் ஏற்றுக்கொள்ள இயைபாகவும் இருக்கும் என்று பேரருள் உள்ளத்துடனும் பெருங் கொள்கைச் சீருடனும், தீர ஆய்ந்து தீர்மானித்துக்கொண்டு, எளிமையும் இனிமையும் சுவையும் அதேபொழுதில் பொருளால் ஆழமும் அகற்சியும் கொண்ட, தாம் மிகுதியும் அறிந்த மொழிப்பரப்பின் நுண்பொருள் தொகைச் சொற்களுள் நுணுகி ஆராய்ந்து தேர்ந்த, பிறிதொரு சொல் அச்சொல்லை வெல்லாத நிலையின், கடுமையும் கசடும் இல்லாத சொற்களைப் பெய்து, தகவு சார்ந்த, பழுமையும், செழுமையும், கொழுமையும், விழுமையும், முழுமையும் நிறைந்தொளிர, அருமையும் பெருமையும் ஒருமையும் பொதுளிய, திருக்குறள் என்னும் இவ்வொளிதரு ஒருதனி நூலை இயற்றியுள்ளார். எனில், இதனைப் பார்த் தறியும் அறிவும், படித்தறியும் அமைவும், கற்றறியும் பூட்கையும், உற்றறியும் வேட்கையும், அறவே இல்லாதாராய், விரைந்துருளும் இவ்வுலக உருண்டையுள், எங்கேனும் ஒரு சல்லி மூலையில், கரைந்துருகி ஒழியும் உடலும், நிறைந்தினிது இயங்கா உணர்வும், கரந்திருளும் கப்பிய அறிவும் உடைய நுகர்ச்சி அவாவும் புகழ்ச்சி வயாவும் கொண்டு, மருட்சி நோக்கொடும், மிரட்சிப் போக்கொடும் கற்றவர் என்று கூறிப் பிதற்றி வெற்றுலா வரும் வறட்சி நாவினர் இதனை மதிப்பிட்டுரைக்கவும் சாலுமோ? அவ்வாறு ஒன்றிரண்டு உரைப்பினும், உயரறிவினார் உலகம் அதனை ஏலுமோ? ஏலாது, ஏலாது என்க.

இனி, இந்நிலையில், இந்நூலின்கண் உள்ள அதிகாரப் பெயர்கள், அவற்றின் அடைவுகள், பொதி பொருள்கள், நுட்பங்கள், நெகிழாத உறுதிப்பாடுடைய தன்மைகள், அவற்றுள் புலப்படுத்தப்படும் உண்மைகள் ஆகிய இவற்றையெல்லாம் ஆழமாக எண்ணுகையில், அவற்றை ஆசிரியரே தாம் அமைத்திருத்தல் வேண்டும் என்று கருதமுடிகிறது. இவ்வளவு பொருள் பொதி சொற்களை வேறு எத்தகு புலமைத்திறம் வாய்ந்தவரும், அத்துணை எளிதில் அமைத்திருக்க ஒல்லாது என்பதே முற்றமுடிந்த முடியாகக் கூறவேண்-