பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

உஉஎ



அவர் வயின் விதும்பல் என்னும் ஒர் அதிகாரத்தின் தோற்றுவாயில் கவிக் கூற்றாய அதிகாரம் என்று அவர் எழுதுவது, இங்கே சிந்தித்தற்குரியது

ஒரு முழு அறநூல், அதுவும் நீண்ட நெடுங்கால எல்லையில், அதன்மேலும், பலவகை முரண்பட்ட மாறுபட்ட, எதிர்ப்பட்ட மொழி யியல், இனவியல், மதவியல், கருத்தியல், பண்பாட்டியல், அரசியல் போராட் டங்களுக்கும் அகப்புறத் தாக்கங்களுக்கும் இடையில் கால வெள்ளத்துள் நீந்திக் கொண்டு வந்து, நம் கை சேர்ந்திருக்கிறது என்றால், அதில், திரிபுகளும், முறிவுகளும், சேர்ப்புகளும், தவிர்ப்புகளும், சிதைவுகளும், மறைவுகளும், மறைப்புகளும், குறைப்புகளும், புனைவுகளும், புகுத்தல்களும் நிகழ்ந்திருத்தல் இயலாது என்று சொல்வதற்கில்லை. கைம்மாறுதல், கால மாறுதல், புடைபெயர்தல், நடை அயர்தல் போன்ற நிலைகளில் முற்கூறிய அனைத்தும் நிகழ்ந்திருக்கலாம். அவற்றை எடையிடுதலும் தொடக்கம் காண்டதும் இயலாத ஒன்று நாடும், நகரமும், ஊரும், உலகமும் மேடிட்டு மறைந்து போகின்ற உலக இயற்கையில், அனைத்துப் பார்வைக்கும் அணித்தாகிய திருக்குறள் போலும் ஒரு பேரற நூல், அச்சிதைவுகளுக்கெல்லாம் தப்பி வருதலும் அரிதே என்றும், அவற்றுள் கூடியமட்டில் தேரிய இனங் கண்டு தேர்வதே இயல்வதாம் என்றும் எண்ணி அமைதலே அறிவுடைமையாகும் என்று கருதிக் கொள்க.

இவ்விடத்து,

சிதைவில என்ப முதல்வன் கண்ணே

- தொல் : 1606


என்னும் தொல்காப்பியக் கூற்றையும் நினைந்து பார்க்க

இனி, இவ்வாறு தொகுத்தும் வகுத்தும் கொண்ட வகையில், ஆசிரியர், ஒவ்வோர். அதிகாரத்தும், அவ்வதிகார நோக்கிற்கேற்ப, தாம் கூற விரும்பிய கருத்துகளை மிகவும் தெளிவாகவும், வலிவாகவும், பொலிவாகவும், அனைத்து நிலைகளினும் மக்களினம் மேம்பாடுற, நூல் முழுவதும், அவ்வப் பால் பகுப்புகளுக்கும், இயல் வகுப்புகளுக்கும் ஏற்ற வகையிலும், நினைந்து நினைந்து போற்றும் முறையிலும், இவ்வுலகிற்குத் தொகுத்தளித்துச் சென்றது, நம் அரும்பெறல் தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் நாட்டிற்குமே பீடும் பெருமையும் தருவதாகும் என்க. இதனாலன்றோ, தமிழியலையும் தமிழறி ஞர்களையும் மனமுவந்து பாராட்டாத ஆரியப் பார்ப்பன இனத்தில் பிறந்தும், தன் இன இயல்பினைக் கடந்தும், பாவலர் சுப்பிரமணிய பாரதி