பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௩௮

முன்னுரை 


லிருந்தே இது தெரிய வருகிறது.

அறவியல் மனத்தையும், பொருளியல் அறிவையும், இன்பியல் உடலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பது நுணுகி நோக்குவார்க்கு விளங்கும்.

மக்களாகப் பிறந்தவர் அனைவர்க்கும் பொருளியல் வாழ்வே முதல் தேவையானது. அறவியல், வளர்ச்சி பெற்ற மாந்தர்க்கான உணர்வு நிலையை அடிப்படையாகக் கொண்டது. உடலியலாகிய காமம், உயிரினத்திற்கே பொதுவானதாம் என்க.

உடலியல் விலங்குத் தன்மையும், பொருளியல் மாந்தத் தன்மையும், அறவியல் மீமிசை மாந்தத் தன்மையும் கொண்டவை.

உடலியல் மக்கள் பெருக்கத்தையும், பொருளியல் மக்கள் வாழ்க்கையையும், அறவியல் மக்களின் சிறப்பு வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டவை.

உண்மை அறிவு நிலைகள் இவ்வாறிருந்தாலும், மக்களாகப் பிறந்தவர் அனைவரும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டுவது மனவுணர்வு நிலைகளை அடிப்படையாகக் கொண்ட அறவியலே ஆகும். மாந்தர்க்கு முதலில் செப்பமுற வளர வேண்டுவது மனமேயாகும். மனமே மாந்தரை விலங்கினின்று வேறு பிரிப்பதும், அந்நிலையின்று உயர்த்துவதும் ஆகும்.

அறவியல் வழியாகத்தான் ஒருவன் அன்பைத் தெரிந்து கொள்ளுகிறான். அதன் கூறுகளாகிய குடும்பம், நட்பு, குமுகாயம், அவை இணைந்து இயங்கும் வாழ்க்கை இவற்றின் ஒன்றுபட்ட தன்மைகளையும் வேறுபட்ட இயக்கங்களையும் உணர்ந்து கொள்ளுகிறான். உயிரினத்தின் இயக்கமும், அதன் நிலைப்பாடும் அன்பையே அடிப்படையாகக் கொண்டவை. 'அன்பின் வழியது உயிர்நிலை' (80) என்றார் ஆசிரியரும். 'அறத்திற்கே அன்பு சார்பு' (76) என்றும் கூறுகிறார். 'உலக வாழ்க்கையையே அன்போடு இயைந்த வழக்கு' (73) என்றும் 'புறத்துறுப்பெல்லாம் நிறைவுற அமைந்தாலும், அகத்து உறுப்பு என்பது அன்பே' என்றும், 'அஃது இல்லையானால் வாழ்க்கை துளிர்விட்டு, மலர்ந்து, காய்த்துக் கனிதராத மரம் போல் ஆகிவிடும்' என்றும் (78) அவர் அறிவுறுத்துகிறார். எனவே, அன்பை அடிப்படையாகக் கொண்ட அவன் அறத்தை இளம் பருவம் முதலாகவே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது ஆசிரியப் பெருமகனாரின் வேணவா. எனவே, இவ்வுலகத்துப் பிறந்த மாந்தன் ஒவ்வொருவனும் முதலாக உணர்ந்து கொள்ள வேண்டுவது நூல்வழி கற்பிக்கப்பெற வேண்டுவது அறத்தையே என்பது அவரின் தெளிந்த தேர்ந்த கருத்தாகும். எனவே அறத்தையே நூலுக்கு முதலாகவும் முடிமணிமாகவும்