பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உருச

முன்னுரை


அவரவர்தம் காலத்திற்கும் கருத்துகளுக்கும் ஏற்பப் பற்பல கூறினார். அவர்கள் அனைவரும் பல்வேறு தகுதிப் பாடுகளை உடையவர்கள். சிலர் ஒரு துறைப் புலமையும், மிகச் சிலர் சில துறைப் புலமையும், ஒரு சிலர் பலதுறைப் புலமையும் கொண்டவர்கள்.

அவர்களுள் ஆசையால் உரை எழுதியவர்களும் உளர்; தாமும் உரையெழுதினோம் என்னும் பெயருக்காக உரையெழுதியவர்களும் உளர். புகழுக்காக உரை வகுத்தவர்களும் சிலர் உளர். இனி, பொருளுக்காக, ஏதோ பிறர் எழுதிய உரைகளுள் சிலவற்றைப் படித்தும், ஒருசிலவற்றை உட்கொண்டும், அவற்றுள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்பெற்ற, தம் மனமும் அறிவும் கவர்ந்த உரைப்பகுதிகளை எடுத்து அவற்றைத் தம் தம் கருத்துகளாலும், சொற்களாலும் திரித்தும், சிதைத்தும், முறுக்கியும், திருக்கியும், ஏதோ தாம் புதுவதாகச் சிந்தித்தும் கண்டும் காட்டுபவர் போல், உரை என்னும் பெயரில் சிற்சில வரைந்தவர் சிலரும் இல்லாமல் இல்லை. இவ்வழியாக, நூலின்கண் உள்ள கருத்துகளை ஒருவாறு மனம் கொள்ளினும் அவற்றை தம் மதக் கொள்கைகளாக நிறுவிக் காட்டும் கரவும் சூழ்வும் கொண்ட நோக்கோடு, உரை வகுத்தவர்களும் சிலர் உளர். சிலர், பூவோடு சேர்ந்த நார் போலத் தாமும் புகழென்னும் மணம்பெறுவதற்காகப், பிறர் அரைத்த மாவையே தம் வாளியில் இட்டு நிரப்பிக் கொண்டவரும் உளர்.

- அவர்களுள் தமிழ் மட்டும் கற்றவர் சிலர். சிறிது தமிழோடு ஆங்கில வழி மட்டும் கற்றவர் சிலர். தமிழும் சம்ஸ்க்கிருதமும் கற்றவர் சிலர். தமிழ் இலக்கிய இலக்கணம் நீந்திக் கரை கண்டவர் சிலர், தமிழ் இலக்கண் இலக்கியங்களையும் சம்ஸ்க்கிருத இலக்கண இலக்கியங்களையும் இணைந்து கற்றவர் சிலர். தமிழும் சம்ஸ்க்கிருதமும் ஆங்கிலமும் கற்றவர் சிலர். தமிழும் பிற தமிழின (திராவிட) மொழியொன்றையும் அல்லது சிலவற்றையும் கற்றவர் சிலர். இனி, தமிழுடன், அறிவியலும் கற்றவர் சிலர். தமிழும் அரசியலும் கற்றவர் சிலர். தமிழும் வரலாறும் கற்றவர் சிலர். தமிழும் சட்டவியலும் கற்றவர் சிலர். தமிழும் சமய நூல்களும் கற்றவர் சிலர், அவ்வாறு தமிழுடன் பொருளியலும், மாந்தவியலும், மொழியியலும், மெய்யறிவியலும், குமுகவியலும் தனித்தனிக் கற்றுச் சிறந்தவர் சிலர்.

ஆனால், திருக்குறளுக்குப் பொருள் காண விரும்புவார் எவராயினும், அவர் தமிழை மொழி நிலையிலும், சொல்லாய்வு நிலையிலும், இலக்கிய இலக்கண நிலையிலும், பாட்டின் யாப்பமைப்பு நிலையிலும், ஒரளவு அறிந்தும், ஆங்கில அறிவுடன் ஒரளவு வடமொழி அறிவும் அதன் உட்கூறுகளும், அவற்றை ஒப்ப வைத்துக் காணும் ஒப்பியலறிவும், தமிழின மாந்தவியல், நிலவியல் வரலாற்றறிவும் வடமொழி வேதங்கள், தொன்மங்கள் (புராணங்கள்), வேதநெறிக் கதைகளான இதிகாசங்கள், சமயவியல், அறவியல், அரசியல், பொருளியல், காதலியல், காமவியல், மருத்துவஇயல், மெய்ப் பொருளியல் அவையே போல் வடமொழி தர்மவியல், சாங்கிய நூல்கள்,