பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உ௪

முன்னுரை


கூறுகளே, பொருட்கருத்துகளே, இன்பக்கருத்துகளே நூற்றுக் கணக்கான நூல்களில் பன்னூற்றுக்கணக்கான இடங்களில் பொதுப்படுமாறு பயன்படுத்தப் பெற்றுள்ளன! ஆயினும் - அந்நூல் எவ்வெந்நோக்கங்களைநோக்கி யாக்கப் பெற்றதோ - அந் நோக்கக் கூறுகள்பற்றிய சிந்தனைப்போக்கே எந்நூல்களிலும் இன்னும் பதிவெய்தவில்லை! எவ்விடங்களிலும், அந் நோக்கங்களை நோக்கிய செயற்பாடுகளில் அது உரிய முறையில் பயன்படுத்தப்பெறவுமில்லை!

ஏனெனில், இது, அக்கால் இக்கால்போல்பரவவில்லை! இக்கால் பரவியுள்ளதெனினும், இதனின் உரிய உள்நோக்கம் இன்னும் மக்களால் உணரப் பெறவில்லை! உணரப்பெறாமைக்குக் காரணம் - முறையுற உணர்த்தப்பெறவில்லை, என்பது தான்! உணர்த்துவது யார்? உணர்ந்தவர்தாமே உணர்த்தவொல்லும் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கும் முன்னரேயே, இந்நிலையில் என் பார்வையுள் பதிவெய்தி, நோக்கினுள் கோப்பெய்தி வதியும் - நம் பாவலரேறு ஐயா அவர்களை இன்றும் அன்றைய வியப்போடுதான் பார்க்கின்றேன்! விழிகளை அகலித்தவாறே கண்டின்புற்று நின்று அன்றைக்கமைந்த அதே விழைவோடும் விருந்துணர்வோடுந்தான், திருக்குறள் தொடர்பாக அவர் விளக்கிவிள்ளும் வியப்புச் செய்திகளை இன்றைக்கும் என் செவிவாயால் மாந்தி மகிழ்கின்றேன்!

ஏனெனில், கண்ட உரைகளைக் கண்டுவந்த என் முன்னர் அவர் கண்டுகாட்டிய விண்டுவிளக்கிய கண்டனைய கவினுரை - உள்ளுரை - தெள்ளுரை - ஒட்டு மொத்தமாகச் சுட்டினால், - வள்ளுவர் அறங்கூறும் மெய்ப்பொருளுரையாகிய வள்ளுரையே (வளவியவுரை: கூர்த்தவுரை) உரிய வள்ளுவநெஞ்சத்தையும் நெறியையும் உண்மையையும் எனக்கு உணர்த்தியது, ஆதலின்! எவ்வாறு - இது இவரால் இயலுகின்றது: . . முன்னர்ச் சுட்டிய பத்துத் தகுதிப்பாடுகளின் பாடு (பெருமை) இப் பாட்டாளியிடம் (பாட்டு + ஆளி) நிறைவுறப் படிந்துள்ளமையே அவரின் இவ் வெளிப்பாட்டுண்மைக்குரிய உட்புலமும் பின்னணியும் ஆகுவன என உணரவும் இயன்றது!

அவர் உணர்ந்து தெளிந்த உரையின் - உரைத்துக் கொண்டு வரும் முறையுரையின் விரிவுற்ற பேருரை வெளிப்பாட்டைத் தமிழறிவுலகம் அங்காந்து எதிர்நோக்கியவாறுள்ளது! அதற்கும் முன்னீடாக, அவரின் கருத்துப்போக்கின் சுருக்கத்தையேனும் முதற்கண் உருக்கித் தருமாறு விழைந்து வேண்டிய நல்லுள்ளங்களின் அறிவார்வ -