பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருஅ

முன்னுரை


கல்வெட்டு வழியான சான்றுகளைக் கொண்டு அவற்றின் உண்மையறிதலும் கடினமான செயல்களாகும். இவற்றுக்கு மேல் திருவள்ளுவரின் உள்ளத்தையும் அறிவையும் அவர் தம் சொற்களையும் கருத்துகளையும் கொண்டே உற்றறிதலும், உய்த்தறிதலும், மிகு கடினமாம். இவற்றுக் கெல்லாம் எந்த வகையான அடிப்படை வரலாறுகளே இல்லாமல் இருப்பதுதான் இன்னும் அவலமானதும் கொடுமையானதுமாகும்.

இனி, இன்னொரு தலையாய சிக்கல் என்னவெனில், திருக்குறள் மூல பாடத்தில் பற்பல வேறுபாடுகள், சிதைவுகள், உட்செருகல்கள், முறை மாற்றுகள், பெயர் மாற்றங்கள் முதலியன ஏற்பட்டுள்ளன என்பதுதான். ஒவ்வோர் உரையாசிரியரும் மூலநிலையில் பற்பல விடங்களில் வேறுபட்டே விளங்குகிறார்.

திருக்குறள் மூல பாடச் சிதைவுகள் பற்றி இவ்விருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிஞர்கள் பலர் மிகப் பெரும் ஆய்வுகளை நிகழ்த்திப் பற்பல உண்மைகளை உணர்த்தியுள்ளனர். இவ்வாய்வியல் கருத்துகளை ஒரு சேரத் தொகுத்து ஒப்பாய்வு செய்து, அறிஞர் கு.ச. ஆனந்தன்' அவர்கள் தாம் எழுதிய 'திருக்குறளின் உண்மைப் பொருள்' என்னும் புத்துரை நூலில் 'உரை - பாட வேறுபாடுகள்' என்னும் தலைப்பில் (முகப்புரை - பக்34 முதல் 37 வரை) பின் வருமாறு கூறுவர்.

"திருக்குறள் எழுதப்பட்டு, ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. முதல் ஆயிரம் ஆண்டுகளில் குறள் நூலுக்குச் சரியான உரைகள் எழுதப்பட்டனவாக வரலாறு கூறுவதில்லை. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னால் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குள், அதற்குத் தருமர், தாமதத்தர், நச்சர், திருமலையர், மல்லர், காலிங்கர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், பரிமேலழகர் ஆகிய பதின்மர் உரை கண்டனர். இவற்றில் பரிமேலழகர் உரை, காலத்தால் மற்ற ஒன்பது உரைகளுக்கும் பிற்பட்டது என்றாலும், பரிமேலழகர் தந்த குறள் வைப்பு வரிசை எண்களையும், இயல்களையும், பொருளையும் இன்றும் நாம் பெரும்பாலும் பின்பற்றுகிறோம். முதல் ஐவர் உரைகள் நமக்குக் கிடைக்கவில்லை."

"சென்ற எழுநூறு ஆண்டுகளில் பழைய உரைகளை அடியொற்றி - குறிப்பாகப் பரிமேலழகர் உரையைப் பின்பற்றிப் பல உரைகளும் பொருள் விளக்கங்களும் வெளிவந்துவிட்டன. அந்தந்தக் காலத்துக்கும் சூழலுக்கும் கருத்து நிலைக்கும் உரைகாரர்களின் பார்வைக்கும் ஏற்ப, திருக்குறளுக்குப் பதவுரைகளும், பொழிப்புரைகளும், பல்கிப் பெருகியதால், திருக்குறள் கருத்துகளில் இசைவிணக்கம் இல்லாத உரை மாறுபாடுகள் வளர்ந்துவிட்டன. உரைப் பெருக்கத்தால் குறள் நூலில் ஆற்றொழுக்குப் போன்ற கருத்துக்