பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௬௧


டுள்ளதாக உணரப்பெறும் ஒரு நூலை, அதன் ஆக்கத்தின் பின், நீண்ட நெடிய காலத்துக்குப் பிற்பட்ட ஒர் உரையாசிரியர் அந்நூலின் மூலமுதல் கருத்தைக் கண்டுபிடிக்க முயல்வதும், அவ்வாறு முயன்றதில் ஏதோ ஒன்று கண்டுகொள்ளப் பெற்றதென்பதும் பிள்ளை விளையாட்டே அன்றி வேறாக இருக்க முடியாது. அறிவு என்பது எவ்வாறு முடிவற்றதோ (infinite) அவ்வாறே ஆய்வும் முடிவற்றதே என்பது ஒர் இயங்கியல் உண்மையாகும். அறிஞர் கருத்துமோ நம்முடைய கருத்துமோ, அல்லது வேறு எவருடைய கருத்துமோ இதற்கு நெறிவிலக்கன்று என்பதை முதலில் நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் கண்டுபிடிக்கப்பெறும் உண்மைகளெல்லாம் ஒரு சார்பு உண்மைகளே; முழு உண்மைகள் அல்ல - என்பது மெய்யறிவியல்.

மூல வித்தினின்று பற்பலப் படிநிலை விளைவு ஆக்கங்கள் நெடிய கால முறையில் ஏற்பட்டு வருகையில் அவ்விளைவுகளின் மூலச் சுவையும், பயனும் வேறுபடுவதும் மாறுபடுவதும் இயற்கையே! ஆனாலும் அவ் வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் சீர் செய்வதாகக் கூறி, உட்பகுப்பு நிலையினும் அமைப்பு நிலையினும் திரிபும் திருத்தமும் செய்து கொண்டே போவது அறிவியலுக்கும் ஆய்வியலுக்கும் பொருத்தமும் அன்று; திருத்தமும் அன்று.

உரையாசிரியர்கள் தத்தம் கருத்து நிலைக்கும் தாம் வாழ்ந்த காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஆட்பட்டவர்கள் என்கிறார் அறிஞர் ஆனந்தன். (முகவுரை பக்38). ஆட்படாதவர் எவர்? ஆனந்தனா? எண்ணிப் பார்க்க.

இவ்வாறான நிலைகளில் இக்கால உரையாசிரியர்களுள் ஒருவராகிய அறிஞர் கு.ச. ஆனந்தன் அவர்கள், முன்னுள்ள உரையாசிரியர்கள் அனைவரும் திருக்குறள் மூல நூலில் செய்திருக்கும் மாற்றங்களினும் மிகக் கொடுமையாக, மாந்தவுடலின் புறவுறுப்புகளையும், அகவுறுப்புகளையும், அவற்றின் இருப்பும் இயக்கமும் சரியில்லை என்று கூறிக்கொண்டு, வெட்டி வெட்டி அறுத்தறுத்து, இடம் மாற்றியும், வடிவு மாற்றியும், கையிருக்க வேண்டிய இடத்தில் காலும், காலிருக்க வேண்டிய இடத்தில் கையும், முகத்திலிருக்க வேண்டுவதை முதுகிலும், வயிற்றினுள் இருக்க வேண்டுவதை மார்பிலுமாகத் தம்மின் பொதுவுடைமைப் புலமைக்கும், சட்டவியல் அறிவுக்கும் பொருந்திய வகையில் புதுமை செய்வதாகக் கருதிப் புலமாற்றிப் பொருத்தி மகிழ்ந்திருப்பது பெரிதும் வருந்தத் தக்கதும் நெஞ்சு துணுக்குறத் தக்கதும் ஆகும். திருக்குறள் மெய்யறிஞர்களும் காலமும் இந்நூலில் இவர் இவ்வாறு கைவைத்துச் சிதைத்த இவ்வடாத செயலைப் பொறுத்துக் கொள்ள இயலவே இயலாது என்க.

இவர் செய்த இச்சிதைவுச் செயல், ஒரு விசிப் பலகையினை (Bench) அல்லது மிசையை (Table) பல்வேறு துண்டுகளாக அறுத்து, அத்துண்டுகளைக் கொண்டு, நாற்காலியும், மொட்டானும் (Stool), அமர்பலகையும் செய்து வைத்துக் கொண்டு, இவைதாம் அந்த விசிப் பலகையும் மிசையும் என்று