பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬௨

முன்னுரை


வலித்தம் கூறினால், என் செய்வது?

இவ்வாறு ஆளாளுக்கு ஒவ்வொரு மாற்றம் செய்தால் குறள் இருக்கும், திருக்குறள் இருக்காது. ஒரு மலரை, இதழிதழாகப் பிய்த்து, அவற்றை நாமாக, நமக்குகந்த ஒரு வகையில் அடுக்கி, அந்த உருவத்திற்கும் பழைய பெயரையே கூறி ஆனந்தன் அழைக்கச் சொன்னால் (காரணம் இருக்கட்டும்), பழைய பூவின் வடிவமைப்பும் என்னாவது?

காலத்தாலும் கருத்தாலும் பல்வேறு சிறு சிறு மாற்றங்களுக்குட்பட்டு, இப்பொழுதைய வடிவில், ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக நிலைப்பட்டுப் போன திருக்குறள் அமைப்பைச் சிதைத்து அந்நூலுக்கே புதுவடிவத்தை அறிஞர் ஆனந்தன் தந்துள்ளது, ஏற்கனவே அச்சாகியுள்ள ஒரு நூலின் பக்கங்களையும் அவற்றின் அச்சுப் பகுதிகளையும், தனித் தனியே பிரித்தும் வெட்டியும் எடுத்து, அவற்றை வேறு வகையாக இணைத்தும் ஒட்டியும் கோப்புச் செய்து, வேறொரு முறையில் அதனை உருவாக்கி இதுதான் அந்த நூல் என்று தந்துள்ளதைப் போன்றதாகும் என்க.

நெய்யப்பெற்ற ஒரு துணியில் உள்ள நூல்களைத் தனித் தனியே உருவியெடுத்து, வேறொரு நெசவு முறையில் புதுவதாக ஒரு துணி நெய்வதைப் போன்றது ஆனந்தன் செய்துள்ள திருக்குறள் மாற்றங்கள். அதற்குப் பகரமாக வேறு நூல்களால் புதிதாகவே ஒரு துணி நெய்து விடலாமே! இவ்வாறு பல்வேறு உவமைகளை அவர் செய்த செயலுக்கு ஒப்பீடாகக் காட்டலாம்.

மேலும் வழிவழியாக வரும் கட்டுக் கோப்பான ஒரு நூலமைப்பைச் சிதைப்பதற்கும், அதைத் தமக்குகந்த வேறு வகையில் அமைப்புச் செய்து காட்டுவதற்கும், வேறு எவர்க்கும் உரிமையில்லை. இஃது ஒரு மெய்ந்நூலாசிரியரின் அறிவையே தாழ்த்துவதாகும்; இகழ்வதாகும்; இழிவு செய்வதாகும். இது, முன்னைய போலிப்புலவர் கந்திலியார் செய்த கொடுமைக்கும் மேலானதாகும். நம் தாத்தாவின் தாடியும், மீசையும், குடுமியும் வைத்திருந்த பழைய உருவப் படத்தைச் சிதைத்து, நமக்கு விருப்பமான வகையிலும், இக்காலத்திற்குப் பொருந்திய வகையிலும், அவர்க்குப் புதிய நாகரிகத் தோற்றத்தைத் தருவது போன்ற, இயற்கைக்கு மாறான கொடுஞ் செயலாகும் இது இத்தகைய செயல்கள் அடாதன; கூடாதன; கண்டிக்கத் தக்கன.

இத்தகைய ஒரு கொடுஞ்செயலை, ஆரியத்தை வளர்த்தெடுக்கவும், நிலைப்படுத்தவும், முன்னரே உள்ள வேதங்களிலோ, அவை தழுவிய புராணங்களிலோ, அவற்றை நடைமுறைப்படுத்தும் இதிகாசங்களிலோ, வேறு. ஆரியவியல் பிராமண அறிஞர் ஒருவர் என்றும் எதற்கும் செய்வதற்குத் துணியவே மாட்டார். முன்னோர் செய்ததைப் பொன் போல் போற்றியொழுகும் மரபு போற்றும் பிராமணரும் செய்யத் துணியாத இவ்விழி செயலை ஆனந்தன் போலும் தமிழியல் மரபு காக்கும் ஒர் அறிஞர் செய்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமையாகும் என்க.