பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬௮

முன்னுரை


நிகழ்கின்ற அறியாமையாகும்.

மரபு என்பது மூடநம்பிக்கையாம் அஃது உரையாசிரியர்கள் தங்களுக்குத் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டதாம்; எது மரபு என்பது எவருக்கும் தெரியாதாம். எனவே, திருக்குறளுக்கு மரபு வழியில் பொருள் கொள்வது தேவையில்லையாம். இவ்வாறெல்லாம் தமிழ்மொழி மரபியலையும், தமிழ்நூல் மரபியலையும் சிதைத்துப் பேசுகிறார் ஆனந்தன்.

இஃது எப்படியிருக்கிறது, எனில், தாய், மனைவி, மகள், தங்கை, அக்கை, அண்ணி, கொழுந்தி - என்னும் உறவுமுறைகளெல்லாம் தேவையற்றன; மூடநம்பிக்கை கொண்டன; இந்நிலையெல்லாம் தவிர்த்துவிட்டு, பெண்-ஆண் என்னும் இரண்டு இயற்கையான பாலியற் பாகுபாடே போதுமானது என்று கூறுவது போன்றிருக்கிறது. இல்லை, இது வேறு, அது வேறு என்று அவருள்பட எவரும் கூறிவிட முடியாது. ஏனெனில் மரபு என்பதே இயற்கை அமைப்புகளில் இம் மக்களினம் தேர்வு செய்து நிலைப்படுத்திக்கொண்ட நடைமுறைதான்.

அறத்துப்பால், பொருட்டால், இன்பத்து அல்லது காமத்துப்பால் என்னும் பாகுபாடுகளெல்லாம் தேவையில்லை என்றால் இயல் பிரிவுகளும், அதிகாரப் பிரிவுகளும்தாம் எதற்கு? அப்படியே திருக்குறளை அகர வரிசை முறையில் எழுதி, இதுதான் நூல் இதில் திருவள்ளுவர் எழுதியதாகக் கூறும் அனைத்துக் குறள்களும் இருக்கின்றன. இவற்றை அவரவர்களுக்கு விருப்பமான முறையில் படித்துக் கொள்ளுங்கள்; அவரவர்களுக்குத் தெரிந்த முறையில் பொருள் கொண்டு கொள்ளுங்கள் - என்று கூறிவிட வேண்டியதுதானே.

இல்லை அவையெல்லாம் ஒரளவுக்கு காலநிலைக்கு ஏற்றவாறு, அறிவியலுக்குப் பொருந்திய வகையில் நாம் நமக்குகந்தபடி மாற்றியமைத்துக் கொள்ளலாம், என்றால் அதற்கு ஆனந்தன் அமைத்த அமைப்புத்தான் சரி என்று ஏன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்? அவரவர், அவரவரது கால நிலைக்கும், கருத்து நிலைக்கும் தக்கவாறு ஒவ்வோர் அமைப்பு முறையைக் கொள்ளலாமே! அதை எவ்வாறு சரியில்லை என்று சொல்வது? சிந்திக்க வேண்டும் அறிஞர்கள்.

ஒவியர் ஒருவர் இருந்தார். அவர் குதிரை ஓவியம் ஒன்று வரைந்து, பொதுமக்கள் பார்வைக்காக ஒரிடத்தில் வைத்திருந்தார். அந்தப் படத்திற்குக் கீழே குதிரை என்றும் எழுதியிருந்தார். வருவோர் போவோரெல்லாம், அதைப் பார்த்து மகிழ்ந்து சென்றனர். ஒரு சிலர் அதில் சில பல குறைகள் கூறினர். சிலர் அதன் நிறையைப் பாராட்டி மகிழ்ந்தனர். ஒவியம் தெரிந்த சிலரும் அதைப் பார்த்தனர். இதன் கால்கள் கொஞ்சம் சரியில்லை; அவை இப்படி-