பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பின்னும் வேண்டுமென்றே கூறிய இழிதகைமையைக் காண்க. அவர் தன்னை உயர்சாதியராய்க் கருதிய பேதமையும் அதனால் விளங்கிற்று என்க)
  • வேறு வேறு நூல்களை யெல்லாம் பிறர்பிறர் மறுத்துரைக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்நூல் அவ்வாறு மறுக்காது சிறந்தது என்று எல்லாரும் ஒப்புக் கொள்வர்.
  • அன்றைய தமிழ் மூவேந்தர்களின் முடிமணி போல் விளங்கியது இந்நூல்.
  • புன்மைப் புலவர்களின் நூல்களால் வருந்தி மண்டைவலி கொண்ட அறிஞர்களுக்கு அவ்வலி போக்கும் மருந்து போல்வதாகும் இந்நூல்.
  • தாமரைக் குளத்தில் குளித்துப் பழகியவர் வேறு குளங்களில் குளிக்க விரும்பார். அதுபோல் திருக்குறளைக் கற்றவர்கள் வேறு நூல்களைக் கற்க விரும்ப மாட்டார்கள்.
  • உலகில் பரந்துபட்டுக் கிடக்கின்ற பல்வகையான அறிவுக்கூறுகளையெல்லாம், உணர்ந்து, தெளிந்து, அவற்றை மற்றவர்களும் உணரும்படி தொகுத்து, வகுத்து, சுருங்கிய சொற்களால் விரிவான பொருள் விளங்கும்படி சொல்லியவர்கள் திருவள்ளுவரைப் போல் வேறு எவருமிலர்.
  • திருக்குறளை எத்தகைய அறிஞர் படித்தாலும் அதன் பொருள்களை எந்தெந்த வகையால் எழுதிக் காட்டினாலும், அதன் ஆற்றலை எவரும் குறைத்து மதிப்பிடல் இயலாது.
  • இந்நூல் முழுமையும் பொருள் விளங்க ஒருவர் படித்து முடித்து உணர்ந்துவிட்டால், அவர் அவற்றைப் பிறர்க்கும் உரைக்கும் ஆசிரியராக அமர்ந்திருக்கலாமே தவிர, இவர் போய் வேறு ஆசிரியர்களிடம் மாணவராய் அமர்ந்து பாடங் கேட்க வேண்டுவதில்லை.
  • இதைவிடச் சிறந்த நூல் ஒன்று உண்டு என்று எந்த மொழி அறிஞரும் கூறமாட்டார்.
  • பலவாறான வாழ்வியல் கூறுகளையும், யாவர்க்கும் எளிதில் புலப்படாமல் மறைந்து நிற்கும் அரும் பொருள்களையும் எல்லார்க்கும் விளங்கும்படி எழுதிய அறிஞர் திருவள்ளுவரைத் தவிர வேறு எவருமே இருக்க மாட்டார்.
  • படிப்பதற்கு எளிதாய்ப் பொருளுணர்வதற்கரிதாக வுள்ளதிது.