பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

௨௭


விளங்கிக்கொண்டால்தான், பொதுப்பொருள் காழ்த்துநின்ற சொற்கள் சிலவற்றிற்குச் சிறப்புப்பொருள் பாங்கிலாக அவர் கொண்டிருந்த உட்கருத்தையும் வெளிக்கொணரமுடியும் என்பதற்குக் கீழ்க்குறிக்கப்பெறும் பாயிரச்சொற்கள் சான்றுகளாகும்.

“தாள் சேர்தலும் அடிசேர்தலும்”: பாதஞ்சேர்தல்களா இவை? தாள் தொழுதல் (நற்றாள் தொழாஅர் - 2), அடிசேர்தல் (மாணடிசேர்ந்தார் - 3; அடிசேர்ந்தார்க்கு - 4, அடிசேராதார் . 10, தாள்சேர்தல் (தாள் சேர்ந்தார்க்கு - 7,8), தாளை வணங்குதல் (தாளை வணங்காத் தலை - 9) என்றவாறு வரும் இடங்களுக்கெல்லாம் உடலுறுப்புகளாகிய பாதங்களைச் சேர்தல் தொழுதல், வணங்குதல்) என்றவாறே பொருளெடுத்துக்கொண்டு முன்னைய உரையாசிரியர்களெல்லோரும் குழந்தையுட்பட - அடி விழுந்து கிடந்த நிலையோடு, இவை பயிலப் பெறும் இடங்களுக்கெல்லாம் நம் ஐயா அவர்கள், “தாள் என்பது முயற்சி”, ‘அடிசேர்தல்’ என்பது ‘பின்பற்றுதல்’ என்றவாறு தெளிபுப்பொருள் தெருட்டுதலையும், வழிபடுதல் என்னும் கூட்டுச்சொற்குரிய முற்பொருள் - பின்பற்றுதலே என்றவாறு பொருள்கூறி வழிகாட்டுதலையும் ஒப்பிட்டு எண்ணித் தெளிகையில் - கடவுள் வாழ்த்துப் பகுதியைக் குறித்து முன்னிருந்துவந்த நம்மின் பல்வேறு மனநெருடல்களின் ஊற்றுக்கண்களே அடைபடுகின்றன! [ “மாணடி சேர்ந்தார்” (3) என்பதற்குப், “பெருமை பொருந்திய நெறிகளைப் பின்பற்றி உலகநடை மேற்கொண்டார்” என்றவாறு நம் பாவலரேறு-ஐயா அவர்கள் உரை வரைந்துள்ள தெளிபுநிலையை உணருவதற்கு ஏந்தாக, இதே அதிகாரத்துள் பதிவுற்றுள்ள “பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்”(6) என்னும் திருவள்ளுவரின் வாயுரையும் நம் மனத்துலையின் மற்றொரு தட்டின் மடியிலேறிக்கொண்டு சமன்காட்டி நிற்பதாகின்றது! ] ஐயா அவர்கள், திருவள்ளுவர் உள்ளக் கருத்தின் அடிசேர்ந்து (பின்பற்றி) தாளொடு (முயற்சியொடு) தாளில் எழுதியதால்தான் நமக்கு இத்தகு மெய்யுரையும் வாய்த்துள்ளது என்னும் உவப்பும் நம் நெஞ்சுள் ஊடுபடர்கின்றது!

உரைகூறலில் ஒரு தெளிவான வெளிப்பாட்டுமுறையைக் கையாளுந்திறம், அவர்க்கு இயல்பாயமைந்துள்ள எழிற்போக்குடையது! ஒரு குறட்பகுதிக்கு ஐயா அவர்கள் உரைத்துள்ள பொருள்வெளிப்பாட்டுரையைச் சான்றுக்கென இங்குக் காணலாம்!

“தம் பொருள் என்ப தம் மக்கள்” : 63 ஆம் எண்ணுடைய குறளின் முதல்வரியிலமைந்த ஒரு கருத்து, இது! இக் கருத்துடைய வரிக்கு