௩௦
முன்னுரை
உரைவரைந்துள்ளார்.
குழந்தையாரும் பாவேந்தரும் "பெய் எனப் பெய்யும் மழை போல்வாள்" என்றவாறு பகுத்தறிவுசான்ற உரையைப் பெய்துள்ளனர். அப்பாத்துரையாரும் இலக்குவனாரும், "பெய்தால் நல்லது என்றவுடன் குறிப்பு உணர்ந்து பெய்யும் மழையைப் போல்வாள்” என்றவாறு ஒப்பேற்றியுள்ளனர். "மக்கள் வணங்க அதனால் மகிழுந் தெய்வங்கள் கற்புடையாள் வணங்காமல் இருக்கவே தானே வலியவந்து ஏவல் செய்யும்" என்றவாறு - தாம் முன்னர் ஒப்பேற்றியிருந்த உரைக்கு அதிகாரியான அப்பாத்துரையார் சப்பையொன்றை அதற்கு மேலுஞ் சார்த்திக் கட்டி வைப்பார் ஆயினார்!
1. "அவள் பெய்" எனச் சொன்னால் மழை பெய்யும்!" 2. "அவள், பெய் என்றால் பெய்யும் மழை போன்ற சிறப்பினள். இவையிரண்டே இது வரையில் இக் குறள்வழியவாகிய ஈருரைப்பாட்டுச் சாறங்கள்!... முன்னையது, முன்னைய உரையாசிரியர்கள் அனைவரும் முற்ற ஏற்றது! முறைக்கொப்ப மொழிந்தது! பின்னையது - அச் செயற்பாட்டு இயன்மை என்பது இயலவே இயலாதவொன்றெனத் தேற்றமாகத் தெளிந்துநின்ற அண்மைக்காலத்தே பகுத்தறிவாண்மை சான்றார் சிலவரால் காலவளர்ச்சிக்கேற்பக் கட்டிச் சுட்டியது!... முன்னையது - மரபுரை! பின்னையது - புத்துரை! பகுத்தறிவாண்மைச் சால்பு உரை!
[இங்கு நமக்கு வேண்டியது, திருவள்ளுவர் எக் கருத்தை உட்கொண்டு, அக் குறளை வெளிக்கொணர்ந்திருக்கின்றார், என்பதுவே! குறளுக்கு வகைவகையான பொருள்கூறுதல் ஒரு வண்ணவகையினவாகுமேயன்றி, ஆக்கிய அவ் ஆன்றோரின் எண்ணத் தொகையாகாது! தமிழின் பன்வகை வளர்ச்சிநிலைகளை அதனின்று வெளிக்கொணருந் திறப்பாடுகள் ஆங்குப் புறப்பாடு கொண்டுள என்பதன்றி அது ஆக்கப் பெற்ற நோக்கத்தைத் தூக்கிநிறுத்தும் ஆக்கப் போக்கு ஆகி விடாது! உரையாசிரியர்பலரும் தத்தம் அறிவுத் திறத்தை எண்ணப்போக்குத்திறத்தை வகைவகையாகக் காட்டும் வல்லுரைகள் பல, திருக்குறளுக்கென வாய்த்துள்ளன அவற்றிற் பெரும்பான்மையன-ஒரு கருத்தையே எவ்வெவ்வாறெலாம் கிளைகிளையாகச் சிந்தித்துப்பார்க்கலாம் என்பதற்குரிய வாய்பாடுகளாகவேகூடல் உள! அவற்றுள் சில்லுரைகள் தம்தம் வாய்க்குவந்தபடியாகவும் கைக்கு வந்தபடியாகவும் எண்ணிய எண்ணப்படியாகவும் உள! அவர் எண்ணியபடி எண்ணிய திண்ணிய நுண்ணிய நேருரைகளோ, அவற்றில் மிகச் சில!