பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௪௨

முன்னுரை 


சூழலையே கலைத்தழித்து விட்டன. அதன் தாக்கத்தில் மீண்டும் அப்பணி தொடங்கும் வாய்ப்பு உள்ளழுந்திப் போய்விட்டது.

ஆயினும், அவ்வுணர்வை அவ்வப்பொழுது சில, நல்லுள்ளங்கள் நினைவூட்டி வந்தன. இறுதியில் கடந்த (1991) சூன் மாத இடையில், ஒரு நாள் இரவு முழுவதும் இந் நூலாக்க உணர்வு தன்னளவில் தானே கிளர்வு கொண்டு உள்ளத்தில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கியது. அதன் விளைவாக அன்றைய விடியலில் ஒரு நன் முடிவுக்கு நாம் வந்தோம். அஃது இது:

"திருக்குறள் மெய்ப்பொருளுரை" யினை நாம் முதலில் திட்டமிட்டு வகுத்துக் கொண்டவாறு முழு அளவில் எழுதப் புகுவதானால், அதற்குரிய நேரமும் சூழலும் துணைவாய்ப்புகளும் அதுவரை வந்து நேரவில்லை. அவ்வாறு நேர்ந்து காலமும் இடமும் பொருந்தி வரும் சூழல் எக்கால் அமையுமோ என்பது அக்கால் தெரியவில்லை. அப்படியே அமைந்தாலும், அப்பொழுது தொடங்கி அவ்வுரை முடிய ஏறத்தாழ, பத்து ஆண்டுகள் ஆகலாம். அப்பொழுது, இக்கால் அவ்வுரையை எதிர்பார்ப்பவர்கள் பலர் இல்லாமலும் போகலாம்; நம் உடல், உள்ள நிலைகளும் எவ்வளவாக இருக்குமென்றும் கூறுதற்கு இயலாது.

"இவ்வாறான சூழலில் இக்கால் உள்ளவர்கள் ஓரளவு நிறைவு பெற, அதன் உரைச் சுருக்கத்தையேனும் எழுதி வெளியிட்டுவிடலே நன்றாகும். அதன் விரிவாக்கத்தையெல்லாம் எம் வாழ்க்கை இறுதிக்குள் எழுதிவிடலாம். இச் சுருக்கவுரையையும் அடுத்து வரும் எம் அறுபதாண்டு நிறைவின் பொழுது (1993) நூல் வடிவில் வெளியிட்டுவிடுதல் வேண்டும்" என்பதாக முடிவு செய்தோம்.

அம்முடிவின்படி, உடனே (1991 - சூன் மாத இறுதியிலிருந்தே) எழுதத் தொடங்கி விட்டோம். அதன்படி, அவ்வுரை 1992 திசம்பர் முடிவு வரை, முதல் பகுதியான ஒர் அறுநூறு பக்க அளவில் எழுதப் பெற்றது. எனவே, அதனை அச்சிடுவிக்கவும் திட்டமிட்டு, அச்சுக்கும் கொடுத்தோம்.

ஆனால், அப்பணி தொடர்ந்து நடைபெறா வண்ணம், 1993, சனவரி 26ஆம் பக்கல் தமிழக அரசு எம்மேல் கடுங்குற்றம் ஒன்றைச் சுமத்தி, தடா என்னும் கருப்புச் சட்டத்தின் கீழ்த் தளைசெய்து, சென்னை நடுவண் சிறையுள் வைத்தது. அதன் பிடியில், 1993 ஆகத்து 26 வரை, சரியாக ஏழு மாதங்கள் சிறையுள் இருக்க வேண்டியதாயிற்று!

இந்தக் கடுஞ்சூழ்நிலையால், 1993 மார்ச்சு 10ஆம் பக்கல், எம் அறுபதாம் அகவை நிறைவுநாள் அன்று வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்த இத் ‘திருக்குறள் மெய்ப்பொருளுரை’ நூலின் முதல் பகுதி, அச்சு முடிந்து,