பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௪௮

முன்னுரைதமிழிலுள்ள நூல்களும் சரி, உலகிலுள்ள வேறுசில தலைசிறந்த மொழிகளில் இதுவரை தோன்றியுள்ள நூல்களும் சரி, மாந்த வினத்திற்குத் தேவையான பொதுவியல், சிறப்பியல் கூறுகளில் தனித்தனியாகவும், ஒன்றிரண்டை அல்லது ஒரு சிலவற்றை மட்டுமே சிந்தித்ததாகவும் உள்ள நூல்களே ஆகும். ஆனால், பொது மாந்தவியல் கூறுகளை முழுவதும் ஒருங்களாவிச் சிந்தித்த நூல் முதன்முதல் திருக்குறள் ஒன்றேயாகும்.

இனி, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பிறந்தவர்களில் மட்டுமன்றி, உலக மொழிகளில் சிறந்த மொழிகளாகவுள்ள வேறு சில மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டு பிறந்து, தமிழ் மொழியை ஏதோ ஒரு வகையில் கற்றுணர்ந்தவர்களிலும்கூட, திருக்குறளை அறியாதவர்கள் எவருமே இருக்க முடியாது.

இனி, யாதாம் ஒரு தேவையின் பொருட்டு ஒரு நூலைக் கற்பதென்பதுடன், அதைக் கற்றோம் என்னும் பெருமையின் பொருட்டும் ஒரு நூலைக் கற்கின்ற பெருஞ் சிறப்புக்கு உரிய நூல் உலக நூல்களில் திருக்குறள் ஒன்றேயாகும்.

இனி, தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினத்தில் பிறந்தவரும், அயல் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ்மொழியைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட அயலினத்தவரும், திருக்குறளை அறிந்துகொள்ள வாய்ப்பிருந்தும், அதை அறிந்து கொள்ளாமலேயே, இவ்வுலகில் பிறந்து மறைந்து விடுவாரானால், அவர் தம் பிறவிப் பேற்றின் ஒரு பகுதிப் பயனை இழந்து விட்டவரே ஆவர் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். அத்தகைய சிறப்புக்குரிய உலகின் மிகமிகச் சிறந்த நூல்களுள் திருக்குறளும் ஒன்று.

அடுத்து, ஒரு நூல் முழுவதையும் மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக் கொள்ளும் தகுதியும் திறனும் வாழ்வியல் தேவையும் உள்ளதும், ஈராயிரத்து அறுநூற்று அறுபது அடிகள்(ஆயிரத்து முந்நூற்று முப்பது இணையடிகள்) கொண்டு அந்நிலைக்கு இசைவானதுமான ஒரு நூல், உலகிலேயே திருக்குறள் ஒன்றுதான் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். ம்ற்றபடி, தமிழில் உள்ளதானாலும் வேறு பிற மொழிகளில் உள்ளதானாலும், ஒரு நூலின் சிற்சில பகுதிகளை மட்டுமேயன்றி, நூல் முழுவதையுமே மனத்தில் வைத்துக்கொள்ளும்படிக்கு அளவும் அமைப்பும் தகுதியும் வாய்ந்த நூல் நாமறிந்த வரை ஒன்றுமில்லை என்று உணர்ந்துகொள்க. அவ்வாறு ஒன்றிரண்டு எங்கேனும் இருப்பினும், அதனைப் பலரும் அவ்வாறு செய்தல் இயலாத ஒன்றாய்.இருக்கும் என்று உறுதியாய் நம்புக.