பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனாா்

௪௯



இலக்கியங்கள் வெறும் வாழ்வியல் சுவைகளை மட்டுமே பேசுகின்றன. இதற்கு நெறிவிலக்காகச் சிற்சில இலக்கியங்களே மாந்த வாழ்வியல் நுட்பங்களையும், நல வழிகளையும் குறிக்கோள்களையும் கூறுகின்றன. இவ்விரண்டாம் வகை இலக்கியங்களுள் திருக்குறள் முதலானதும், தலையாயதும் ஆகும்.

இனி, தமிழ்மொழியின்கண் இக்கால இலக்கியம் எனும் பிரிவின் உள்ளடக்கிக் கூறப்பெறும் சான்றோர் செய் நூல்கள் பற்பலவற்றுள், திருக்குறளே மிகுதியான உரையாசிரியர்கள், திறனாய்வாளர்கள், இயல் நூல் அறிஞர்கள், அறநூல் ஆசிரியர்கள், பொழிவாளர்கள், மனனம் செய்து மக்கட்கு வியத்தகு விளக்கங்கள் கூறும் பல்திறனாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள் முதலிய பன்முக அறிஞர்களாலும் மிகுதியும் எடுத்துக் கையாளப்பெற்றுவரும் ஒரு நூலாகும் என்பதை எண்ணிப் பார்ப்பின், இதன் பெருமையும் அருமையும் வழக்கும், காலநிலைப்பும் சாலப் போற்றுதலும் பெரிதினிது விளங்கும்.மற்று, இது போல் வழக்கு நூல்கள் சிலவே. அவையும் சமயஞ் சார்ந்த நூல்களே; அல் இலக்கியங்களே!

எனவே, இவ்வகையுள், இன்றுள்ள மக்கள் வழக்கு நூல்களுள் இதுவே தொன்மையது, முன்மையது, அறங்கூறுவது, அரசியல் தெளிவது பொருளுரைப்பது, புலனறிவுறுத்துவது, இன்பம் நுவல்வது, இயற்சை தெரிப்பது, மெய்யறிவுணர்த்துவது, மேலோர் புகழ்வது, நீடு நிலைப்பது பாடுபொருள் சிறப்பது முதலிய பல்வகைப் பாராட்டுக்கும் சீராட்டுக்கும் உரியதாம் என்க. இனி, இவற்றுடன் தமிழியல் கோட்பாடுகளை, ஆரியவியலினின்று பிரித்தெடுத்து, மரபு நிலையில் தமிழின மாந்தப் பெருமையையும், பண்பியலையும் விளக்க முனைந்த முழு முயற்சியில் இதுவே முதலாவதும் முடிவானதும் ஆகும் என்று பெருமிதம் கொள்க.

இனி, தமிழில் உள்ள 'திரு' என்னும் ஓர் உயர் சொல் பலவகையிலும் பற்பல சிறப்புப் பொருள்களைத் தருவதாகும். அழகு, செல்வம், செல்வத்தெய்வம், தெய்வத் தன்மை, சிறப்பு, ஒளி, பொலிவு, நற்பேறு, நல்வினை, மங்கலம், மங்கலநாண், ஒரு வகைத் தலையணி, மகளிர் மார்பில் அமர்ந்துள்ளதாகக் கருதும் ஒரு வீற்றுத் தெய்வம், நுகர்ச்சிப் பேறு, எல்லோராலும் விரும்பப்பெறும் தன்மை, கவர்ச்சி நிலை - என்னும் பொருள்கள் அவற்றுள் சில.

இவ்வுயர்ச்சி முன்னடைச் சொல், நூல் பெயர்களுக்கும் சில இடப் பெயர்களுக்கும் முன்னடையாக வந்து, அந்நூல்களின், - இடங்களின் பெருமையையும் சிறப்பையும் தெய்வத் தன்மையையும் உணர்த்தத் தமிழில்