பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

௫௩"செய்யொத்த பயிர்போலச் செந்தமிழும்
      செழும்பொருளும் சேர்ந்த செல்வம்,
 மையொத்த மனவிருளை மாற்றியொளிர்
       மணிவிளக்கு மாந்த ரெல்லாம்
 வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தமர
       வாழ்வுஎய்த வழிந டத்தும்
 கையொத்த நற்றுணைவன் வள்ளுவனார்
       திருக்குறள்எம் கண்கள் அன்றோ!

 காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
    யாபதியும் கருணை மார்பின்
 மீதொளிர்சிந் தாமணியும் மெல்லிடையில்
    மேகலையும் சிலம்பார் இன்பப்
 போதொளிர்பூந் தாளினையும் பொன்முடிசூ
    ளாமணியும் பொலியச் சூடி
 நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
    தாங்குதமிழ் நீடு வாழ்க!”

- ஒகி சுத்தானந்த பாரதியார் -

"வள்ளுவனார் வாய்மொழிபோல்
     மன்பதையா வும்பேணும்
 தெள்ளுமறை ஒன்றுளதோ தேர்!
     உலகிற் கொருபுலவர்
 வள்ளுவரே; ஓர்நூல்
     இலகு திருக்குறளே ஆம்!”

- ந.மு. வேங்கடசாமியார் -

"மக்கள் உலக வாழ்க்கைக்கு வேண்டப்படுவனவாய் உள்ள அடிப்படை அறிவுண்மைகள் எல்லாம் நூலில் கூறப்பட்டுள்ளன என்பது நன்கு புலனாகும். ஆதலின் இந்நூலைச் சிற்றின்பநூல், அறநூல், ஒழுக்கநூல், அறிவியல் நூல், அரசியல்அறிவுநூல், உலகவறிவுநூல், மெய்யறிவுநூல், பேரின்பநூல் - ஆகிய நூல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விளங்கும் ஒரு தொகுதிநூல் என்று நாம் கூறலாம். உலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவாயுள்ள அறிவுண்மைகளெல்லாம் ஒன்று சேர்த்துக் கூறப்பெற்ற திருக்குறள் போன்ற ஒரு தனிநூல் எம்மொழியிலும் இல்லை.