பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௬௦

முன்னுரை - தன்னொழுக்கத்தையும், குமுகாய ஒழுகலாறுகளையும் இதில் கூறப்பெறும் கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ள விரும்புபவர்களுக்கு இஃதொரு கலங்கரை விளக்கமாகும்.
இனி, திருக்குறள் ஒரு புரட்சி நூலும் ஆகும்.
- இதில் கூறப்பெறும் கருத்துகள் அரசியல், பொருளியல், குமுகாயவியல் அமைப்புகளை மாற்றியமைத்துப் புரட்சிசெய்ய முனைபவர்களுக்கு இஃதொரு தோன்றாத்துணை வழிகாட்டி நூலாகும்.
இவற்றுடன், இஃதோர் இனநல மீட்பு நூலும் ஆகும்.
- முந்து தமிழினத்திற்குக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து இன்று வரை நேர்ந்துள்ள அரசியல், பொருளியல், குமுகவியல், மொழியியல், இனவியல், கலையியல், பண்பாட்டியல், கல்வியியல், அறிவியல் முதலியவற்றில் நிகழ்ந்த வீழ்ச்சிகளையும் தாழ்ச்சிகளையும், நெரிவுகளையும் சரிவுகளையும், இழிவுகளையும் அழிவுகளையும், அறியாமைகளையும் மூடநம்பிக்கைகளையும் அறவே அகற்றுகின்ற மறுமலர்ச்சி இனநல மீட்பு முயற்சிகளுக்கும், அத்தகைய மீட்பர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் இஃதொரு செவ்வையான வழிகாட்டுதல் நூலாகும். ஆரியத்தால் அழியவிருந்த தமிழ் மரபியல் பண்புகளை ஒருசேரத் தொகுத்து நிலைப்படுத்திய நூல், இது. இதன்கண் தமிழின நல மீட்புக்கான கருத்துகளும் உத்திகளும் ஆங்காங்கு மறைமுகமாகவும் குறிப்பாகவும் காட்டப் பெறுவதுடன், ஆரியத்தின் குமுகியல், பண்பாட்டியல் தாக்கங்களும், முள்ளின்மேல் விழுந்த பட்டுச்சேலையை மெதுவாக நீக்குவது போல் நீக்கப்பெறுகின்றன.
இனி, அனைத்துடனும், இஃதோர் ஆண்-பெண் இன்பநூலும் ஆகும், என்க.
- இதில் கூறப்பெறும் காமவியல் கூறுகளும், ஆண்-பெண், கணவன்-மனைவிக்கான இல்லறவின்ப உத்திகளும், உயர் நாகரிகமும், உளப்பண்பும் கொண்டவர்கள் கடைப்பிடித்து, மாறாத உளஇன்பமும் உடலின்பமும் பெற உதவுகின்றவை ஆகலின், அவற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்கள், இதில் கூறப்பெறும் அஃததற்கான பகுதிகளையும் இன்பத்துப் பாலையும் கருத்துான்றிக் கற்றுக் கடைப்பிடித்து ஒழுகித் தங்கள் இல்லறத்தை இன்ப அறமாக

ஆக்கிக்கொள்ளலாம், என்க.