பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௬௬

முன்னுரை 


சிறப்புப்படுத்துகிறது. இத்தகைய சிறப்பு, தமிழில் வேறு எந்தப் புலவர்க்குமோ நூலுக்குமோ வாய்த்திலது.

இந்நூல் தவிர, வேறு சிறப்புரைகளும் இப்புலவர் பெருமானுக்கு உண்டு. நம் நாட்டுப் புலவர்களும் வெளிநாட்டுப் புலவர்களும் இவரைப் பற்றிக் கூறிய, கூறுகின்ற சிறப்புரைகளும் பெருமையுரைகளும் பல நூற்றுக் கணக்கானவை. அவை அனைத்தும் இவ்விடத்து ஒருசேரத் தொகுத்துக் கூறின், அவையே ஒரு பெருநூலாக விரியும் தகைமை பெற்றவை. விரிவஞ்சி அவற்றை இங்கெடுத்துக் கூறாமல் விடுகிறோம்.

சுருங்கக் கூறின், திருவள்ளுவப் பேராசிரியர் காலத்தையும் இடத்தையும் வென்ற பேராற்றல் படைத்தவர்; சிறந்த நுண்மாண் நுழை புலம் மிக்கவர்; தம் தாய்மொழியாகிய தமிழ் மொழியைப் பழுதறக் கற்றவர்; அதில் உள்ள சொற்களைப் பொருளளவாகவும், சொல்லாய்வு அளவாகவும் மிக நன்றாக உணர்ந்தவர். அதனால் மிகச் சிறந்த சொற்களைக் கொண்டு அரிய செய்திகளை மிக நுட்பமாக எடுத்துக் கூறும் ஆற்றல் மிக்கவர். அதற்கு அவர் கூறும் கீழ்வரும் சில குறட்பாக்களும் குறள் தொடர்களுமே சான்று பகர்வன:

“இன்சொலால் ஈரம் அளைஇப் படி(று)இலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்” – 91.

“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்” – 96.

“சிறுமையுள் நீங்கிய இன்சொல்” – 98.


“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” – 100.

“ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்” – 128.

“பயன் சாராப் பண்பில் சொல்” – 194.

“பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்” – 196.

“அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்” – 198.

“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்” – 200.

“யாதொன்றும் தீமையிலாத சொலல்” – 291.

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்பு” – 389.