பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௮௦

முன்னுரை 


தோன்றலாகவும் உள்ள திருக்குறளை, ஆர்வ மிகுதியாலும் அளவிறந்த மதிப்பாலும் உலகப் பொது மறை என்று பெருமையுடன் சிலர் கூறியும் எழுதியும் வருகிறார்கள். அது சரியன்று.

‘மறை’ என்பது, அறிந்தோ அறியாமலோ ‘வேதம்’ என்னும் பொருளில் பயன்படுத்தப்பெற்று வருகிற ஒரு சொல். மறைவான பொருள்களை உணர்த்துவதால் ‘மறை’ என்றும், அதற்குத் ‘திரு’ என்னும் அடை கொடுத்துத் 'திருமறை' என்றும் கூறப்பெறுகின்றது. ஆனால், ‘வேதம்’ என்னும் சொல்லுக்கு ‘அறிவு நூல்' என்பதே பொருள். அதுவும் தமிழ் மூலம் கொண்டதே என்பார் பாவாணர்.

விழி - அறிவு. பார்வையறிவே முதலறிவாதலால் அறிவுக்கு விழி முதலாக நின்றது போலும்.

‘விழிப்புணர்வு’ ‘விழிப்பற்றவன்’ போன்ற நூல் வழக்கையும் உலக வழக்கையும் ஒர்க.

விழி - வித் - வேத் - வேது - வேதம் - அறிவு நூல்

‘வேதம்’ என்னும் சொல் ஆரிய வேதங்களையே சுட்டும் சொல்லாக, காலப் போக்கில் வழக்குக் கொண்டுவிட்டது. அதேபோல், கிறித்துவர்களின் ‘பைபி’ளும், இசுலாமியர்களின் ‘குர்ஆ’னும், வேதங்கள் என்றே வழக்குக்கு வந்துவிட்டன.

இதைப் பின்பற்றியே தமிழிலும் சிலர் திருக்குறளைத் தமிழர் வேதமாக்க வேண்டும் என்னும் நயப்பான குருட்டாசையில், ‘தமிழ் வேதம்’ என்றும், அதன் வழி ‘தமிழ் மறை’ என்றும், அதன் விரிவாக ‘உலகப் பொது மறை’ என்றும் கூறிவருகின்றனர். இஃது, ஆரியத்தை மறைவாக மேம்படுத்திக் கூறுவதே ஆகும்.

‘வேதம்’ ஆரியர்க்கே உரியதும், பிறர்க்கு மறுக்கப்பட்டதுமான நூலாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே ‘மறை’ என்பது அதற்கு ஒருவேளை பொருந்தலாம். ஆனால், திருக்குறள் என்றைக்குமே எவர்க்குமே மறைக்கப்பெற்றதோ, தவிர்க்கப்பெற்றதோ அன்று. அந்நூல் உலகில் உள்ளார் யாவர்க்கும் பொதுவான, பொதுவுடைமையான நூலே ஆகும். எனவே திருக்குறளை மறைநூல் என்று கூறுவதைவிட, அறநூல், அறிவுநூல். வாழ்வியல் நூல் என்றவாறு சொல்லப் பெறுவதே மிகவும் பொருந்துவதாகும்.

திருக்குறள் ‘அறம்’ என்னும் பெயராலேயே அழைக்கப்பெற்ற நூல் என்றும் அறிஞர்கள் கூறுவர். அதற்கு எடுத்துக்காட்டாக,

‘ஆன்முலை அறுத்த அறணி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்