அ௬
முன்னுரை
'அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்'
- 46
'இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை'
- 47.
'ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து'
- 48.
'அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை'
- 49.
- என்று பலவாறும் வலியுறுத்திக் கூறினார் ஆகலின் இனி, இவை பற்றியெல்லாம் இந்நூலுள், துறவறவியல் முன்னுரையில் அளவை முறையான் நன்கு விளக்கப்பெறும்; விரிவை ஆங்குக் கண்டுகொள்க.
இனி, இவை போலவே, பொருட் பாலின்கண் அரசியலில் கூறும், இறைமாட்சி, கல்வி, கேள்வி, அறிவுடைமை, குற்றங் கடிதல், பெரியாரைத் துணைக் கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றந்தழால், பொச்சாவாமை,செங்கோன்மை, ஒற்றாடல், ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகியவையும்,
- அமைச்சியலில் கூறும், அமைச்சு, சொல்வன்மை, வினைத்துாய்மை, வினைத்திட்பம், வினை செயல் வகை, துாது, மன்னரைச் சேர்ந்தொழுகல், குறிப்பறிதல், அவை அறிதல், அவை அஞ்சாமை - ஆகியனவும், அரசுக்கு உறுப்பாயுள்ள,
- அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகிய இயல்களுள் கூறுவனவும், அரசர்க்கும், அமைச்சர்க்கும், இற்றை ஆட்சியர்க்கும் சிறப்பும், மற்றுள்ள அனைவர்க்கும் பொதுவும் ஆகும் என்க.
- என்றிவ்வாறு, இங்குக் கூறப்பெற்ற இவ்விவ் வகைகளிலேயே திருக்குறளைப் பொருள்படுத்திக் கற்க வேண்டுமே யன்றி, அனைவர்க்கும் அனைத்தும் சிறப்பென்றோ, பொதுவென்றோ, கருதிக் கற்பது, திருக்குறளை நன்கு உணர்ந்து கொண்டதும், கடைப்பிடித்தலும், ஆகா என்க.
இனி, திருக்குறளில் ஆண் ஆளுமைத் (ஆணாதிக்கம்) தன்மையே மிகுந்திருப்பதாக ஒரு சிலர் கூறுவர். அஃது ஒரளவு உண்மையே ஆயினும், அவர் பேரளவில் கூறுவது ஆண்-பெண் பொதுமையையே என்பது இவர் கருத்துகளை நுணுகி ஆராய்வார்க்குப் புலப்படாமல் போகாது. மேலும், அவா் கூறும் ஓரளவு ஆணாளுமைத் தாக்கக் கருத்துக்கூட ஆண் குமுகாயத் தாக்கம் எப்பொழுதும் பெண்மேல் படிந்திருப்பதையே காட்டுகிறது. இஃது