பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௯௪

முன்னுரை 


குறைந்து, ஆணாளுமை தலையெடுத்து நின்ற காலமாகும். எனினும், திருவள்ளுவப் பேராசான் பெண்மைக்கும் தாய்மைக்கும் பெருமையும் அருமையும் சாற்றிப் பேசும் கொள்கையுடையவராக இருந்ததும், அவர்க்குப் பொதுவாளுமைக் கோட்பாடும் கால்கொண்டிருந்தது என்பதும், அவர் இந்நூலுள் அவற்றின் தேவை குறித்துப் பேசும் கருத்துவெளிப்பாடுகளால் தெரிய வருகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
- 54.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
- 53.

இங்குப் பெண்ணைச் சிறப்பித்துக் கூறும் அதே பொழுதில் அவளுக்கு வற்புறுத்தப்பெறும் கற்பியல் கோட்பாடு என்பது, இல்லறவியலுக்கு மிக இன்றியமையாத கோட்பாடாகும். இது பெண்ணுக்கு மட்டும் உரியதாகத் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. ஆணுக்கும் இது பெரிதும் வற்புறுத்தப்பெறுகிறது என்பதை நாம் மறத்தல் கூடாது. ஆரியவியலில் பெண் கற்பே மிகுதியும் வலியுறுத்தப்பெறுகிறது. ஆண் கற்பு அவ்வாறு பெரிதும் வலியுறுத்தப் பெறுவதில்லை என்பதையும் இங்கு நினவு கூர்க திருக்குறளில், பெருமை அதிகாரத்துள் வரும்,

'ஒருமை மகளிரே போலப் பெருமையும்,
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு'
- 974.

என்னும் குறளில் ஆணுக்குக் கற்பு வலியுறுத்தம் தெளிவாகச் சுட்டப் பெறுகிற்து'ஓர் ஆணுக்குப் பெருமையே, தன் கணவனையே நினைந்தொழுகும் ஒருமை மன மகளிர் போலத் தானும் தன்னையே நெகிழ விடாது நிலைநிறுத்திக்கொண்டு ஒழுக்கம் காப்பதில்தான் உண்டு' என்று இதில் கூறப்பெறும் ஆழமான கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. இக் கருத்து இல்லறவியலில் கூறப்பெறாமல், பொருட்பாவில், குடியியலில் கூறப்பெறுவது, இன்னும் சிறப்பு மிக்கதும் வலிவு பொருந்தியதும் ஆகும் என்க. என்னை?

இல்லறம் என்பது பொதுமைப் படாதது; அகத்தது; அமைவு நிலை கொண்டது; எனவே ஒரு பெண்ணின் கற்புநிலை என்பது, அவள் கணவற்கும், அக் குடும்பத்திற்கும் மட்டுமே தெரிந்தொழுக வேண்டிய தேவை சான்றது. அந்நிலை மாண்பு (51, 53, மாட்சி (52), பெருமை (54), தகை (56), நிறை (57), சிறப்பு (58), புகழ் (59) என்னும் உயர்வுகளுக்குரியது.

ஆனால், ஒர் ஆணுக்குரிய கற்பு என்பது, இல்லறத்தினும், பொதுவறத்திற்கு உரியது. பொதுமைப்படுவது, ஒருவன் இல்லத்தை விட்டு,