பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இ-ள்:- இனிய உளவாக இன்னாத கூறல்-(இனியவாகச் சொல்லும் சொற்கள் பிறர்க்கு இன்பத்தைத் தருதலைக் கண்டவன்) இனிய சொற்கள் இருக்க (அவற்றை விட்டு)க் கடிய சொற்களைக் கூறுதல், கனி இருப்ப காய் கவர்ந்த அற்று-(பழமும் காயும் ஓர் இடத்தே கண்டவன்) பழங்கள் இருக்க (அவற்றை விட்டு)க் காயைக் கொண்ட தன்மைத்து.

[கவர்ந்து என்பது ஈற்றகரம் கெட்டு நின்றது.]

இஃது, இனிய சொற்களை விட்டுக் கடிய சொற்களைக் கூறுதல் தமக்கும் துன்பத்தை விளைக்கு மென்றது. ௩00.

௨௭-வது.-அடக்கமுடைமை.

அடக்கமுடைமையாவது, மனம் மொழி மெய்களால் அடங்கி ஒழுகுதல். [மொழியடக்கம் இனியவை கூறலின் பின் நிகழ்வதாதலால் இனியவை கூறலின் பின்னும், மெய்யடக்கமும் மனவடக்கமும் தவத்திற்கு இன்றியமையாதன வாதலால் தவமுடைமையின் முன்னும் இது கூறப்பட்டது.]

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு.

இ-ள்:- பொருளாக அடக்கத்தை காக்க-(ஒருவன் தனக்குப்) பொருளாக அடக்கத்தை உண்டாக்குக; உயிர்க்கு ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை-உயிர்க்கு ஆக்கம் அதினின் மேற்பட்டது பிறிதில்லை.

[பொருளாக என்பது ஈறு கெட்டு நின்றது.]

இஃது, அடக்கமுடைமை வேண்டு மென்றது. ௩0௧.

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.செறிவறிந்து, சீர்மை பயக்கும், அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

௯௪