பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

[சான்றோர்-கல்வி யறி வொழுக்கங்களால் நிறைந்தோர்.]

இது, பயனில கூறுதல் சான்றோர்க்கு ஆகா தென்றது. ௩௩0.

௩௪-வது.-நிலையாமை.

அஃதாவது, மயக்கத்தினால் தானென்று நினைத்திருக்கின்ற யாக்கையும், தனதென்று நினைத்திருக்கின்ற பொருளும் நிலை நில்லாமையைக் கூறுதல். [தவத்தினையுடையார் கூடாவொழுக்கத்தை நீத்த பின்னர் 'யான்' 'எனது' என்னும் பற்றுக்களைத் துறக்க வேண்டுதலின், அவற்றின் நிலையாமை முதற்கண் கூறப்பட்டது.]

நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

இ-ள்:- நில்லாதவற்றை நிலையின என்று உணரும்-நில்லாத பொருள்களை நிலைநிற்பன என்று நினைக்கின்ற, புல் அறிவாண்மை கடை-புல்லிய அறிவுடைமை இழிந்தது.

இது, பொருள்களை உள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டு மென்றது. ௩௩௧.

ற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

இ-ள்:- செல்வம் அற்கா இயல்பிற்று-செல்வம் நில்லாத இயல்பை யுடைத்து; அது பெற்றால் ஆங்கே அற்குப செயல்-அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாசிய அறங்களைச் செய்க.

நிலையாமை மூன்று வகைப்படும். அவை செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என்பன.

செல்வம் நிலையில்லாத தென்றும், செல்வத்தைப் பெற்ற பொழுதே அறம் செய்யவேண்டு மென்றும் இது கூறிற்று. ௩௩௨.