பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

௩௭-வது.-அவா வறுத்தல்.

அவாவறுத்தலாவது, பொய்ப் பொருள்கள் மேல் செல்லும் ஆசையைத் தவிர்த்தல். முத்திக்குக் காரணம் மெய்யுணர்தலே அமையுமாயினும், பின்னும் உடம்போடு நிற்றலின் தான் விட்ட பொருள்கள் மாட்டு ஆசை செல்லின், மீண்டும் பிறப்பிற்குக் காரணமாம். ஆதலான், இதனைத் தவிரவேண்டு மென்று எல்லாவற்றினும் பின் கூறினார்.

ஞ்சுவ தோரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

இ-ள்:- ஒருவனை வஞ்சிப்பது அவா-ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை; (ஆதலான்), அஞ்சுவது அறன்-(அதனை) அஞ்சுவதே அறம்.

வஞ்சனை செய்தலாவது முன்னே நன்றி செய்வாரைப் போல் நின்று பின்பு தீக்கதியுள் உய்த்தல். [ஓரும் என்பன இரண்டும் அசை.]

இஃது, ஆசையின்மை வேண்டு மென்றது. ௩௬௧.

வாவில்லார்க் கில்லாகும் துன்பம்; அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

இ-ள்:- அவா இல்லார்க்கு துன்பம் இல்லாகும்-ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும்; அஃது உண்டேல் (துன்பம்) தவாது மேல் மேல் வரும்-அது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.

இஃது, அவாவால் துன்பம் உண்டாகு மென்றது. ௩௬௨.

௧௩௨