பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈகையுடைமை

இஃது, ஒப்புரவு செய்வானது செல்வம் வறிஞருடைய வறுமைப் பிணியை நீக்கு மென்றது. ௨௧௮.

த்த தறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

இ-ள்:- ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்-ஒப்புரவு அறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்-அஃது அறியாதான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன்.

இஃது, ஒப்புரவு அறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது. ௨௧௯.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறற்கரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

இ-ள்:- புத்தேள் உலகத்தும் ஈண்டும்-தேவர் உலகத்தினும் இவ்வுலகத்தினும், ஒப்புரவின் நல்ல பிற-ஒப்புர வொழுகல்போல் நல்லவாகிய பிற, பெறற்கு அரிது- பெறுதற்கு அரிது.

இஃது, ஒப்புரவு செய்தல் போல நன்றாயிருப்பனவாகிய பிற தேவருலகத்தினும் இவ்வுலகத்தினு மில்லை யென்றது. ௨௨0.

௨௩-வது.-ஈகையுடைமை.

ஈகையாவது இல்லென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுத்தல். [இது செல்வரால் செய்யப்படுவ தொன்றாதலால், இவ்வதிகாரம் நல்கூர்ந்தா ரல்லாதாரால் செய்யப்படும் ஒப்புரவுடைமையின்பின் கூறப்பட்டது.]

௭௯