பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


கின் றுன்செயலே யென்றும் நினைவார்க்கு வினைகளெலாம் நீங்குந் தானே' எனவரும் பகுதி இங்குக் கருதத்தகுவதாகும்.


௩௧. சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்
றாவி யறாதேயென் றுந்தீபற
அவ்வுரை கேளாதே யுந்தீபற.

இஃது இறைவன் திருவருளாகிய உள்ளீட்டினைப் பெறாத சமயங்கள் உயிர்க்கு உறுதி பயப்பன அல்ல என்று அறிவுறுத்துகின்றது:

(இ-ள்) திருவருள் ஞானத்தினால் அடைதற்குரிய சிவகதியாகிய விளைவின்றிப் பதராயொழியும் ஏனைப் புறச் சமயங்களிற் புகுந்து நின்று வீடுபேற்றின்பமாய் உயிர்க்குறுதி விளைப்பதாகிய நற்பயனை இழந்து போகாதே. அப் பயனற்ற சொற்களைப் பொருளெனக் கேட்டுக் காலத்தை வீணாக்காதே (சித்தாந்தச் செந்நெறியில் நிலைத்து நிற்பாயாக) எ-று.

சாவி போதலாவது, நிலத்தில் விதைத்த பயிர் வளர்ந்தும் தன் பயனாகிய நெல் முதலிய மணிகள் முதிர்தலின்றிப் பதராய்ப் போதல். சைவ சித்தாந்தம் அல்லாத ஏனைச் சமயங்கள், தாம் கொண்டுள்ள தத்துவக் கொள்கைகளாலும் தருக்க நெறி முறைகளாலும் வளர்ந்த பயிர்களைப் போன்று தோற்றமளித்தாலும், கூர்ந்து நோக்குமிடத்து, மக்கள் தம் உயிரியல்பினையும் தம்மைப் பிணித்துள்ள பாசங்களின் இயல்பினையும் தனக்கேயுரிய பெருங்கருணைத் திறத்தால் மன்னுயிர்களின் பாசப்பிணிப்பினைப் படிகால்முறையாய் அகற்றி ஈறில்லாப் பேரின்ப நிலையாகிய வீடுபேற்றினையருளும் இறைவனது இயல்பினையும் அவனது திருவருளையே கண்ணாகக் கொண்டு உள்ளவாறுணர்ந்து தற்செயலற அம்முதற்பொருளுடன் இரண்டறக்கலந்து நுகரும் பேரின்ப விளைவாகிய நெல்மணியினை நல்குந் திறத்தனவாக விளைந்த பயிர்கள் அல்ல என அறிவுறுத்துவார், “சாவிபோம் மற்றைச் சமயங்கள்” என்றார். உழவனொருவன் மக்களின் பசிப்பிணியினை நீக்குதல் வேண்டிப் பெரிதும் முயன்று வளர்த்த பயிரானது, பயன்தருவதற்குரிய காலமளவும் வளர்ச்சி பெற்றுக் கருக்கொண்டு விளைதற்குரிய காலத்திலே மணியாகிய உள்ளீடு பெறாது பதராய்ப் போன தன்மை போல, பலவேறு தத்துவங்களைக்கொண்டு தழைத்து வளர்ந்த சமயங்கள் பல, உலகுயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் நின்று உயிர்கட்குப் பொருள்களை உள்ளிருந்து அறிவித்தும் அவ்வுயிர்களோடு உடனிருந்தும் தோன்றாத் துணையாய் நின்று அருள்புரிகின்ற இறைவனையும் அம் முதல்வனது திருவருளாற்றலையும் உள்ளவாறுணர்ந்து நன்றியுடன் போற்றும் மெய்யுணர்வாகிய உள்ளீடில்லாதனவாயின், அவையும் பதராய்ப் பயனற்றவையே யென்பது கருத்து. உயிர்கட்கு உறுதி