பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

103


பயக்கும் தெய்வங்கொள்கையினை வற்புறுத்துந் தெளிவுபெறாத புறச் சமயங்களை ""நன்றியில் நெறி" என்பர் சேக்கிழார் நாயனார். இங்கு “ஆவி” என்றது, உயிரின் அறிவாற்றலாகிய சிற்சத்தியினை. அறுதலாவது, பொருள்களை உள்ளவாறறிதற்குரிய ஆற்றல் தேய்தல். அவ்வுரை என்றது, புறச் சமயத்தார் கூறும் பயனில்லாத கூற்றுக்களை, கேளாதே என்றது, பயனில்லாத சொற்களைக் கேட்டுக் காலத்தை வீணே கழிக்காதே என்றவாறாம்.

சைவ சித்தாந்த நெறியாகிய இச்சமயத்திலேதான் உயிர்க்குயிராகிய முதல்வன் அன்புடைய அடியார்கட்கு அருள் வழங்குதற்கென்றே அம்மையப்பனாகத் தோன்றித் தில்லைத் திருவம்பலத்திலே நின்று எக்காலத்தும் அருட்கூத்து ஆடியருள்கின்றான் என்பதும், தாழ் சடையானாகிய இறைவன் தானும் தன்னைவிட்டுப் பிரியாத சத்தியுமாய் நின்று ஒப்பற்ற அருள்மொழியினை வழங்குதலால், தன்செயலற்றுச் சிவமேதானாய் உலகம் உய்ய அருட்செயல்கள் பலவற்றை நிகழ்த்தி யருளிய அருளாளர்கள் இந்தச் சமயத்திற்போன்று வேறு எங்கும் இல்லையென்பதும், அத்தகைய அருட்செல்வர்களாகிய அடியார்களின் பெருமை அளவிடற்கு அரியது என்பதும் ஆகியவுண்மைகளை விரித்துணர்த்தும் முறையில் இத்திருவுந்தியார் பாடலின் விளக்கமாக அமைந்தவை, திருக்களிற்றுப்படியாரில் 65 முதல் 68 முடியவுள்ள திருப்பாடல்களாகும்.


65. இன்றிச் சமயத்தி னல்லதுமற் றேழையுடன்
ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார்-இன்றிங்கே
அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவரார்
எங்குமிலை கண்டா யிது.

இது, சைவ சமயத்தார் போற்றும் இறைவனது பெருமையினையும் அடியார் பெருமையினையும் விரித்துக் கூறுகின்றது.

(இ-ள்) இந்தக் கலியுகத்திலே சைவ சமயமாகிய இந்தச் சமயத்திலன்றித் திருவருளாகிய பிராட்டியுடன் அம்மையப்பனாகத் தோன்றி ஒப்பற்ற மெய்யுணர்வுபதேசமாகிய அருளுரையினை அடியார்களுக்கு வழங்கி எல்லோரும் காணத் தில்லைப்பதியிலே பொன்னம்பலத்திலே அருட்கூத்தியற்றியருளும் இறைவரைப் போன்று வேறு எந்தச் சமயத்தில் யாருளர்? அன்றியும் இந்தப் பூமியிலே எலும்பு உயிர்பெறும்படி தெய்வத் தமிழ்பாடிய அடியார் வேறு எந்தச் சமயத்தில் உள்ளார்? (ஒருவரும் இல்லை) எ-று.