பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


ஏழை-பெண். “ஏழையுடன் ஒன்று சொலி மன்றத்து நின்றவர்” என்றது, தன் இடப்பாகத்தவளாகிய சிவகாமியுடன் கண்டு வழிபடுவோர் உய்யும் வண்ணம் ஒப்பற்ற திருவருட் குறிப்பைப் புலப்படுத்திப் பொன் மன்றில் ஆடல் புரிந்தருளும் அம்பலவாணராகிய இறைவரை. இங்கு 'ஒன்று' என்றது, இறைவனது ஒப்பற்ற திருவருட் குறிப்பினை. சொலி-சொல்லி. சொல்லுதல்-புலப்படுத்தல், அஃதாவது உலகவுயிர்கள் உய்திபெறுதல் வேண்டித் தான் ஆடியருளும் திருக்கூத்தின் பயன் அனைத்தையும் தன் இடப்பக்கத்தவளாகிய சிவகாமி தானே ஏற்றுக் கொண்டு மன்னுயிர்களுக்கு வழங்கியருளும்படி புலப்படுத்தல். மன்றம் என்றது, உலகபுருடனுக்கு நெஞ்சத் தாமரையாகத் திகழும் தில்லைச் சிற்றம்பலத்தினை.

இனி, “ஏழையுடன் ஒன்று சொலி மன்றத்து நின்றவர்” என்றது, தில்லையிற் பலரும் கூடிய சபையிலே இலங்கைப் புத்தருடன் நிகழ்த்திய வாதில் ஊமைப் பெண்ணைப் பேசும்படி செய்து புத்தரை வாதில் வென்றருளிய மாணிக்கவாசகரைக் குறித்தது எனினும் பொருந்தும்.

“அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவர்” என்றது, திருஞான சம்பந்தப் பிள்ளையாரை. திருமயிலையில் சிவநேசர் என்னும் வணிகர் தம் மகள் பூம்பாவை என்பவள் அரவு தீண்டியிறந்த நிலையில் அவளது எலும்பினை ஒரு குடத்திற் சேமித்து வைத்திருந்து, திருஞான சம்பந்தப் பிள்ளையார் அங்கு எழுந்தருளியபோது அவர் பணித்த வண்ணம் அக்குடத்தைக் கோயில் முற்றத்தே வைத்தாராக, ஆளுடைய பிள்ளையார், “மட்டிட்ட புன்னையங்கானல் ” என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடியருளி, அக்குடத்திலுள்ள எலும்பு பூம்பாவையாக உயிர்பெற்றெழும்படி செய்தருளினர் என்பது வரலாறு அங்கம்-எலும்பு. அங்கம் உயிர்பெறப் பாடியருளியவரை அடியவர் எனக் குறிப்பிடவே “ஏழையுடன் ஒன்று சொலி மன்றத்து நின்றவர்”அத்தகைய அடியவரை ஆட்கொண்டருளிய சிவபெருமானாகிய இறைவர் என்பது தானே பெறப்படும்.


66. விரிந்துங் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டுந்
தெரிந்துந் தெரியாது நிற்பர்-தெரிந்தும்
தெரியாது நிற்கின்ற சேயிழைபா லென்றும்
பிரியாது நின்றவனைப் பெற்று.

இது, சைவமாம் சமயஞ்சார்ந்து சிவமாந்தன்மைப் பெருவாழ்வு பெற்ற மெய்யடியார்களின் சிறப்பினை விரித்துரைக்கின்றது.