பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

105


(இ-ள்) தோற்றமில் காலமாக உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து எல்லாவற்றையும் அறிந்தும் அறிவித்தும் இயக்கி நிற்கும் போதும் தான் ஒன்றிலும் தோய்வறநிற்கும் ஞானசத்தியாகிய தேவியை எக்காலத்தும் விட்டுநீங்காத சிவனைத் தங்களிடத்திலே உறுதியாகப் பெற்றமையால் (சிவஞானிகளாயினார்), சிவபெருமான் தம்மிடத்திற் போன்று எங்கும் விரிந்து பரவிய முறைமையினைக் கண்டு பேருணர்வாகிய சிவஞானத்தின் வழி யாண்டும் விரிந்தும்,தாம் என்னும் உணர்வு மறையத் தம்மையும் உலகையும் மறந்து சிவாநுபவத்திலே யழுந்தியடங்கியும், இவ்வாறு ஈசன் எனுங் கனியினை விழுங்கிச் சுவைத்து இன்புறுவர். இங்ஙனம் இன்புறு நிலையில் பிராரத்த வாதனையால் பிரபஞ்சம் மீண்டுந் தம்முன் தோன்றினாலும் தாம் சிவபரம் பொருளோடு ஒன்றிய தியானத் திறத்தாலே அவ்வாதனை தம்மைத் தாக்காதவாறு செம்பொருளில் அழுந்தி நிற்பார்கள் எ-று.

‘தெரிந்துந் தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும் பிரியாது நின்றவனைப் பெற்று, விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள்; மீண்டும் தெரிந்தும் தெரியாது நிற்பர்’ என இயையும். நிற்பர் என்னும் பயனிலைக்கு எழுவாயாகச் சிவஞானிகளாகிய அடியவர்கள் என்பது மேற் செய்யுளினின்றும் வருவித்துரைக்கப் பெற்றது. தெரிந்தும் தெரியாது நிற்கின்ற சேயிழை என்றது, எக்காலத்தும் உலகுயிர்களோடு உடனாகி நின்று அறிந்தும் அறிவித்தும் இயக்கும் போதும் ஒன்றிலுந் தோய்வற நிற்கின்ற சிவசத்தியினை. கதிரவனும் கதிரும் போன்று சிவமும் சத்தியும் பிரிவற நிற்கும் ஒருபொருளேயாத லுணர்த்துவார் “சேயிழைபாலென்றும் பிரியாது நின்றவன்' என்றார்.

“நந்தம்மையாளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்”

எனவரும் திருவாசகப் பொருளை யடியொற்றியமைந்தது இத்தொடராகும், பிரியாது நின்றவனைப் பெறுதலாவது, யான் எனது என்னுஞ் செருக்கறச் சிவமாந்தன்மைப் பெருவாழ்வினைப் பெறுதல். தனது உயிர்க்கு உயிர் என்றுணரும் தெளிவினைப் பெறுதல் எனினும் அமையும். 'பெற்று' என்னும் செய்தென் வாய்பாட்டு வினையெச்சம், மழை பெய்து குளம் நிறைந்தது என்றாற்போன்று பெற்றமையால்’’ என ஏதுப்பொருளில் வந்தது.

விரிதலாவது, வியாபகப் பொருளாகிய சிவத்தோடு ஒன்றினமையால் சுட்டறிவின் நீங்கி எவ்விடத்தும் எப்பொருள்களையும் இருந்தாங்கே யுணரும் பேருணர்வினராய்த் திகழ்தல். குவிதலாவது, தமது உணர்வு புறத்தே உலகப்பொருள்களிற் செல்லாது அகத்தே சிவத்திற் பொருந்தியடங்குதல். விழுங்குதலாவது, எங்கும் நீக்கமற நிறைந்த சிவபரம்பொருளை அன்பீனும் ஆர்வத்தாலே தன்னுள்

14