பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


ஒன்றியிருப்பார்களாயின், இவ்வுலக மக்களும் தமது உள்ளம் புறத்தே பொறிவழிச் செல்லாது பரம்பொருளிடத்தே யொன்றி நிற்றற்கின்றிமையாத பொறியடக்கத்தினைப் பெறுவர். தவச் செல்வராகிய அவர்கள் உலகம் நலம்பெறுதல்வேண்டி ஏதேனும் ஒருபொருளை உள்ளவாறு எண்ணுவரானால் இவ்வுலகத்தவர்களும் அப் பொருளின் உண்மைத் தன்மையை உள்ளவாறு உணரப்பெறுவார்கள். இத்தகைய தவச் செல்வர்கள் வெகுளும்படி எவரேனும் இப்பெரு மக்களை இகழ்வார்களாயின் அவர்தம் வாழ்விலே திருமகள் தங்க மாட்டாள்; புகழாகிய நங்கை அவரைவிட்டு அகல்வாள், நாமகளாகிய கலைச்செல்வி அவர்கள்பால் நயந்து நிற்கமாட்டாள் எ-று.

நற்குணச் செல்வராகிய சிவஞானிகள் தக்க காரணமின்றி யாரையும் வெகுள மாட்டார்கள், உலகோர் தம்மையிகழ்ந்ததன் காரணமாக ஒருகால் இவர்களிடத்தே வெகுளி தோன்றுமாயின் அவ்வெகுளியை இவர்தம் மெய்யுணர்வு மீதுTர்ந்து விரைவில் அழித்து விடும் என்பார், "தாம் முனியின்” என்றும், இவ்வாறு இவர்கள்பால் வெகுளி தோன்றி நிற்குங்காலம் ஒருகணப் பொழுதேயாயினும் நிறைமொழி மாந்தராகிய இவர்களால் வெகுளப்பட்டார் யாவராயினும் இவர்களது வெகுளியின் வெம்மையினைத் தடுத்தல் அரிதாகலின் அவர்கள் பெற்றிருந்த செல்வமும் புகழும் கல்வியும் விரைந்து கெடுமென்பார், “பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும் நாமடந்தை நயந்து நில்லாள்” என்றும் கூறினார்.

‘குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது’ (திருக்குறள்-29)

எனத் தெய்வப்புலவரும்,

ஈச னடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாகுமே நந்நந்தி யானையே (திருமந்திரம் - 53)

எனத் திருமூல நாயனரும் அருளிய பொருளுரைகளின் விளக்கமாக அமைந்தது, இத்திருக்களிற்றுப்படியார் பாடலாகும். செம்புலச் செல்வர்களாகிய சிவஞானிகளின் அருளாலும் வெகுளியாலும் இவ்வுலக மக்கள் அடையும் ஆக்கத்தினையும் அழிவினையும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது இத்திருப்பாடலாகும்.