பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


அப்பெருமக்களே பாசப் பிணிப்பு அனைத்தையும் விட்டு நீங்கிய உண்மையான துறவறச் செல்வர்கள் என்பார் "அவர்களே துறந்தார்” என்றார். “அவர்களே” என்புழிப் பிரிநிலையேகாரம் வருவித்துரைக்கப் பட்டது.

இவ்வாறு விழிப்பு நிலையிலேயே உலகப் பொருள்களில் தோய்வற்று மேல்நிலையில் நின்று தன்செயலறச் சிவமேதானகத் திகழும் திருவருள் நலம் வாய்க்கப் பெற்ற இப்பெருமக்களே,

“சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்
     சருவ சங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே யுயிரின்
     பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ’’

(சித்தியார் சூ. 8. விருத்தம் 35)

எனப் போற்றுவர் அருணந்தி சிவாசாரியர். பராவுதல் சஞ்சரித்தல். பராவுசிவர் என்றது, மக்கள் வடிவினை மேற்கொண்டு உலகிற் சஞ்சரிக்கும் சிவபரம் பொருள் என்னும் கருத்தில் சிவஞானிகளுக்கு வழங்கும் பெயராகும்.

“நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்
றிராவு மெதிராயது பராநிலை புராணனம ராதிபதியாம்”

(3–6:6)

எனவரும் ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தில் இச்சொல் இடம் பெற்றுள்ளமை காணலாம். பராவுசிவர் எனப் போற்றப் பெறும் இப்பெருமக்களை "நடமாடுங்கோயில் நம்பர்” (திருமந்திரம் 1857) எனக் குறிப்பிடுவர் திருமூலதேவநாயனார்.

“துரியங்கடந்த” என்னும் முதற்குறிப்புடைய இத்திருவுந்தியாரின் பொருளை விரித்து விளக்குவது, பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடலாகும்.


69. துரியங் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுங் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க் கவன்.

இது, தம்மை மறந்து சிவனை நினைக்கின்ற செம்மை மனமுடைய மெய்யடியார்களைச் சிவபெருமான், தன்தன்மை அவர்கள்பால் விளங்கித் தோன்ற அவர்களைத் தானாக்கி அருள்புரிவன் என்கின்றது.