பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

111


(இ-ள்) உயிர்களின் சுட்டறிவுக்கு எட்டாத ஒளியான ஞானசத்தியுடன் என்றும் பிரிப்பின்றியுடனாய் நின்றருளும் சிவபெருமான், தன் பால் அன்புமீதூரப் பெற்ற அடியவர்களுக்குச் சிவபோகமாகிய பேரின்பத்தை நனவு நிலையிலேயே வழங்கியருளித் தான் செய்தற்குரிய திருவருட் செயல்களை அவர்களோடு உடனாய் நின்று அவர்களைக் கொண்டு செய்வித்து, அவர்களே செய்தார்கள்’’ என்னும் வினைமுதற் றன்மையை அவர்களுக்கு உரியதாக்குவன் எ-று.

திருவுந்தியார் ௩உ ஆம் பாடலிற் போலவே அதனை யடியொற்றியமைந்த இத்திருக்களிற்றுப்படியார் பாடலிலும் "துரியம்” என்பது, முதற்கண் தற்போதத்தையும் பின்னர்ச் சிவபோகத்தையும் உணர்த்தி நின்றமை இங்கு ஒப்புநோக்கற் பாலதாகும்.

“துரியங் கடந்த சுடரே போற்றி” எனவருந் திருவாசகத் தொடரை அடியொற்றி யமைந்தது,

“துரியங் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான்”

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும்.

இவ்வாறு, சிவமாத்தன்மைப் பெருவாழ்வினைப் பெற்ற செம்புலச் செல்வர்கள்பால் இறைவன் உடனாய் நின்று அவர்களைக் கொண்டு அருட்செயல்கள் பல நிகழ்த்தியருளுவன் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சைவசமய குரவர்கள் நால்வரும் செய்தருளிய அற்புதங்களை விரித்துரைப்பன பின்வரும் திருக்களிற்றுப்படியார் திருப்பாடல்களாகும்.


70. ஒடம் சிவிகை உலவாக் கிழிஅடைக்கப்
பாடல் பனைதாளம் பாலைநெய்தல்-ஏடெதிர்வெப்
பென்புக் குயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்குபுகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்.

இது, சைவ சமய குரவர் நால்வருள் திருஞானசம்பந்தப் பிள்ளையார் நிகழ்த்தியருளிய அற்புதங்கள் பலவற்றைத் தொகுத்துரைக்கின்றது.

(இ-ள்) முள்ளிவாய்க் கரையினின்று ஆற்றுப் பெருக்கிலே நாவலமே கோலாக ஒடஞ் செலுத்தித் திருக்கொள்ளம்பூதூர் சேர்ந்ததும், திருவரத்துறையிலே முத்துச் சிவிகை பெற்றதும், திருவாவடுதுறையிலே உலவாக்கிழி பெற்றதும், திருமறைக்காட்டிலே மறைக்கதவம் அடைக்கப்பாடியதும், திருக்கோலக்காவிலே பொற்றாளம் பெற்றதும்