பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்



74. அம்மையிலு மிம்மையிலு மச்சந் தவிர்த்தடியார்
எம்மையுமா யெங்கு மியங்குதலான்-மெய்ம்மைச்
சிவயோக மேயோக மல்லாத யோகம்
அவயோக மென்றே யறி.


இது, சித்தத்தைச் சிவன்பாலே வைத்தலாகிய சிவயோகமே முத்தியை வழங்குவதென்றும் சிவனையெண்ணாத யோகப் பயிற்சிகள் யாவும் பிறப்பிறப்புக்களை யுண்டாக்கும் அவயோக மென்றும் அறிவுறுத்துகின்றது.

(இ - ள்) சிவனுடன் ஒன்றி வாழும் சிவஞானிகள் உலக மக்களுக்கு இனிவரும் பிறப்புக்களில் உண்டாகும் அச்சத்தினையும் இப்பிறப்பில் தோன்றும் அச்சத்தினையும் நீக்கித் தம்மைச் சார்ந்தார் அனைவர்க்கும் நற்பயன் அளிக்கும் முறையில் மெய்ப்பொருளாகிய சிவனருளில் ஒன்றுபட்டொழுகுந் தன்மையதாகிய சிவயோகமே சிவனை உள்ளவாறு கூடிய யோகமாகும். இதுவல்லாத புறக்கரண அகக்கரணங்களின் பயிற்சியளவிலுள்ள கன்மயோகங்களெல்லாம் மேன்மேலும் பிறவிக்கு வித்தாய் இடர்விளைப்பனவாதலின் அவையெல்லாம் அவயோகமென்று அறிவாயாக எ - று.

அவம் - பயனின்மை.

‘அச்சந்தவிர்த்த சேவகபோற்றி’ என்பது திருவாசகம்.


75. மன்னனருள் எவ்வண்ணம் மானுடர்பால் மாணவக
அன்ன வகைய தரனருளும்- என்னில்
அடியவரே யெல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில்
அடியவரே யெல்லாம் அறி.

இஃது உலகமுதல்வனாகிய இறைவனுக்கு எல்லாரும் அடிமையாக விருக்கவும் அம்முதல்வன் சிவஞானிகளிடத்தில்மட்டும் பேரருள் புரிதல் நடுவுநிலை திறம்பிய செயலன்றோ? என வினவிய மாணாக்கர்க்கு அம்முதல்வன் நடுவுநிலை திறம்பினன் அல்லன் என்பதனை உலகியலில் வைத்து அறிவுறுத்துகின்றது.

(இ - ள்) மாணவனே, நாடாளும் வேந்தனது அருட்குணம் குடிமக்கள் எல்லோரிடத்தும் எவ்வாறு ஒப்பப் பயனளிக்கின்றதோ அவ்வாறே உலகமுதல்வனாகிய இறைவனது திருவருளும் மன்னுயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒப்பப் பயன்தருவதாகும்; என்றால் எல்லோரும் இறைவனுக்கு அடியவரேயாவர். ஆயினும் அவர்களில் யாவர் தற்செயல் கெட இறைவன் திருவருள்வழி ஒத்து ஒழுகுகின்றார்களோ அத்தகைய திருவருட் சார்புடையவர்களே எல்லா வகை