பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

209


திங்களில் நடத்தப்பெறும் உத்தர விழாவும் சித்திரைத் திங்களில் நடத்தப் பெறும் சித்திரை விழாவும் மார்கழித் திங்களில் நடத்தப் பெறும் திருவாதிரை விழாவும் முற்காலத்தில் எவ்வேழு நாட்களே நடந்தன என்பதை நன்கு விளக்கு கின்றன.

(2) தெலுங்கு மொழியில் முதலில் செய்யுளும் செய்யுள் நூலும் தோன்றிய காலம். குண்டூர் ஜில்லா ஓங்கோல் தாலுகாவிலுள்ள ஆதங்கி (Adanki) என்ற ஊரில் ஒரு வயலில் கிடக்கும் கல்லில் இரு செய்திகள் பொறிக்கப் பெற்றுள்ளன. அதில் ஒரு தெலுங்குச் செய்யுளும் உளது. அக்கல்வெட்டு கி.பி.844 முதல் கி.பி.888 முடிய ஆட்சி புரிந்த கீழைச்சாளுக்கிய மன்னனாகிய மூன்றாம் கனகவிசயாதித்தனது ஆளுகையின் முதலாம் ஆண்டாகிய கி.பி. 845 இல் பாண்டரங்கன் என்பான் அவ்வேந்தன்பால் படைத் தலைவனாக அமர்ந்தான் என்பதைத் தெரிவிக்கின்றது. அக்கல்வெட்டிற் காணப்பெற்ற தெலுங்குச் செய்யுளுக்கு முன்னர் இயற்றப்பட்ட வேறு தெலுங்குச் செய்யுட்கள் இதுகாறும் கிடைத்தில. எனவே, தெலுங்கு மொழியில் முதலில் செய்யுள் இயற்றப்பெற்ற காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியாகும்.

தெலுங்கு நாட்டிலுள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் விசய வாடையில் (Bezwada) காணப்படும் யுத்த மல்லனது கல்வெட்டிலுள்ள தெலுங்குச் செய்யுட்களே எல்லாவற்றிற்கும் முந்தியனவாய் மிகப் பழமை வாய்ந்துள்ளன என்றும் அவை இயற்றப்பெற்ற காலம், கி.பி. பத்தாம் நூற்றாண்டாக விருத்தல் வேண்டும் என்றும்கருதி வந்தனர்.. பின்னர், மேற்குறித்த ஆதங்கிக் கல்வெட்டுக் கிடைக்கவே, அதிலுள்ள ஒரு தெலுங்குச் செய்யுளைக்கண்டு அது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றதாதல் வேண்டும் என்றும், தெலுங்குமொழியில் செய்யுள் இயற்றத் தொடங்கிய காலமும் அதுவே யாகும் என்றும் உணர்ந்து பெருமகிழ்ச்சியுற்றனர். ஆந்திரரது தாய் மொழிப் பற்று நம்மனோர் நன்குணர்ந்து பின்பற்றுதற்குரிய தொன்று.