பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54வல்லிக்கண்ணன்

 களை எடுத்துச் சொல்வது பயனுள்ள காரியமாகவே இருக்கும் என்று அவர் கருதினார். ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை திகழ்த்தக் கட்டாயம் வருவதாக இசைவு தெரிவித்தார்.

அதன்பிறகு முறைப்படி செயல்கள் தொடர்ந்தன. மன்றத் தலைவர் வேண்டுதல் விடுத்தது; அவர் சம்மதம் தெரிவித்து எழுதியது அழைப்பும் நிகழ்ச்சி நிரலும் அச்சிட்டு அனைவருக்கும் அனுப்பியதோடு அவருக்கும் சில பிரதிகள் அனுப்பியது எல்லாம்தான். மன்றத்தைச் சேர்ந்தவர்களும் மற்றும் பலரும் ஆண்டு விழா நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

அந்த நன்னாள் அன்றைக்குத்தான்.

தற்காக சுந்தரமூர்த்தி திருநகர் போகவேண்டும். அவர் வசித்த கிராமத்துக்கும் நகருக்கும் எட்டு மைல் தூரம் இருந்தது. போய் வருவது, முன்னைக் காலத்தைப் போல, பெரும் பிரச்னை இல்லை, அடிக்கடி 'டவுன்பஸ்' போய் வந்து கொண்டிருந்தது.

சீக்கிரமே வந்து விடும்படி ரசிக நண்பர்கள் கேட்டிருந்தார்கள். நிகழ்ச்சிகள் மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். எனினும் நாவலாசிரியர் சுந்தரமூர்த்தி நான்கு மணிக்கே வந்து சேர்வது நல்லது என்று அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அவரை கவுரவிக்கும் முறையில் ஒரு சிற்றுண்டி விருந்தும் ஏற்பாடு செய்யலாம் என்பது அவர்கள் நினைப்பு.

இரண்டு மணி பஸ்ஸில் போகலாம் என்று அவர் திட்டமிட்டிருந்தார். மூன்று மணிக்குக் கிளம்பினால் கூடப் போதும்தான். ஆனால், சீக்கிரமே போனால், டவுனில் அங்கே இங்கே நின்று, அதையும் இதையும் பார்த்துப் பொழுது போக்குவதற்கு வசதியாக இருக்கும்.