பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ரத்தக்காட்டேரி




பெரிய முதலாளி' பிறவிப் பெருமாள் கண்விழிக்கும்போது வெயில் 'சுள்ளென்று' அடித்துக் கொண்டிருந்தது. வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்த உழைப்பாளிகளின் முதுகு மீதுதான்.

தனியாக அமைக்கப்பட்டிருந்த பங்களாவில், குளு குளு என்றிருந்த ஒரு அறையில், கட்டில் மீது மெத்தையிலே சுகதித்திரை பயின்று கொண்டிருந்த பெரிய முதலாளிக்கு வெயிலைப் பற்றிய கவலை கிடையாது. மழை, புயல், இடி, மின்னல் எதைப் பற்றியும் கவலை கிடையாது. அவருடைய கவலை எல்லாம் பணத்தோடு பணம் சொத்தோடு சொத்து சேர்ப்பது எப்படி என்பதேயாகும்.

பிறவிப் பெருமாள் பிறக்கும் பொழுதே பெரிய ஆளாகத்தான் பிறந்தார். சுயமுயற்சியால் முன்னுக்கு வந்து, சமூகத்தில் தனக்கென்று ஒரு தனி மதிப்பும் செல்வாக்கும் சம்பாதித்துக் கொண்டே வடமலையப்பரின் திருமகன் ராசாப் பிள்ளையின் புத்திரபாக்கியமாக அவதரித்தார் அவர். இந்தத் 'தற்செயல் நிகழ்ச்சி’ அவரை குட்டி முதலாளி என்ற கெளரவத்துக்கு உரியவராக ஆக்கிவிட்டது. எல்லோரும் அவரை சின்ன எசமான்’ என்றும் 'குட்டி முதலாளி' எனவும்