பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்61

 பார்க்க வேண்டும் என்று அம்மாக்காரி ஆசைப் பட்டாள். 'பெரிய ஐயா' தான் மறுத்து விட்டார். பையனைச் சுமந்து திரிய ஆள் மாற்றி ஆள். இவை எல்லாம் சிறப்புக் குறையாமல் இருந்தபோது, பாலுக்கும் பழத்துக்கும் பஞ்சமா ஏற்பட்டு விடும்? பட்டு பட்டாடைகளும் அளவுக்கு அதிகமாகவே குவிந்து கிடந்தன.

இப்படி 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்று வளர்ந்து, வீட்டார் பலராலும் செல்லம் கொடுக்கப் பெற்று, தான் பிடித்த மூப்பாக அகம்பாவம், கர்வம், பிடிவாதம் முதலிய குணங்களோடு பெரியவனான பிறவிப் பெருமாள் உரிய காலத்தில் 'முதலாளி' என்ற அந்தஸ்தையும் பெற முடிந்தது. நம்ம பையன் படிச்சுப் பாஸ்பண்ணி தாசில் வேலைக்கா போகப் போறான்? ஏதோ நாலு எழுத்து தெரிஞ்சால் போதும் என்று பெரியவர்கள், கருதினார்கள். அதனால், முதலாளி மகன் முதலாளிக்கு படிப்பு போன்ற விசேஷத் தகுதி எதுவும் கிடையாது.

அவர் எங்கும் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் எதுவுமில்லை. உலக விவகாரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமே என்ற கவலையோடு பத்திரிகைகளைத் தேடும் ஆர்வமும் அவருக்கு இல்லை. ஆகவே, அவராக மனசு வைத்து எழுந்தால் தான் அவருக்குப் பொழுது விடிந்ததாக அர்த்தம்.

பிறவிப் பெருமாளின் தாத்தா அதிகாலையிலேயே விழித்தெழுந்து, வயல் வேலைகளுக்குப் போவார்; உச்சிப்பொழுதுவரை பல் விளக்காமலே பாடுபடுவார்; இவ்வாறு வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி உழைத்ததனால்தான் அவர் சொத்து சேர்க்க முடிந்தது என்று ஊரில் பேச்சு வழங்கியது. அவ்வாறு உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலையில் பிறந்துவிட்ட பலரின்