பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 69

 தலைமேலே ஏறி உட்காரப் பார்ப்பானுக’ என்று கணக்குப்பிள்ளையிடம் திருவாய் மலர்ந்து அருளினார் அவர்.

பிறவிப் பெருமாளின் கழுகுக் கண்கள் பசிப் பார்வையோடு வட்டமிட்டன; ஒரு இடத்தில் பதிந்து நின்றன. 'ஏய்;, சங்கரலிங்கத்தின் வண்டியை மறிங்கடா உம், சீக்கிரம் ஒடுங்க. இதோ நானும் வர்றேன்’ என்று குரைத்து, சில ஆட்களை விரட்டினார்.

சங்கரலிங்கம் என்கிற சிறு விவசாயி தனது வயலின் கண்டு முதலை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். பல மாதங்களாகப் பாடுபட்டதன் பலனை ஓரளவு பெற்றிருந்தான். மழை இல்லாமல் கெட்டுப் போனது, தேவையில்லாதபோது அநாவசியமாக மழை பெய்து கெடுத்து பூச்சி விழுந்து பாழ்பட்டது. தக்க தருணத்தில் ரசாயன உரம் பிரயோகிக்க முடியாமல் போனது போன்ற பல தொல்லைகளையும் தாண்டி, ஒரு தினுசாக விளைந்து, அறுவடையான தானியத்தை அவன் வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும். 'பெரிய வீட்டு ஐயா' மாதிரி அறைக்குள் பூட்டி வைத்து, விலை மிகவும் உயர்ந்து வருகிற சமயத்தை எதிர்நோக்கி காத்திருப்பதற்காக அல்ல. சாப்பாட்டுக்கு, விதைக்கு, கடனைத் தீர்க்க, குடும்பச் செலவுக்காக இப்படி எத்தனையோ இனங்களுக்கு அதை ஒதுக்கியாக வேண்டும், மிச்சம் பிடிக்கவோ, சேர்த்து வைக்கவோ அவனுக்கு வசதி ஏது?

ஏ சங்கரலிங்கம்! என்னதான் உன் நினைப்பு! என்று சீறியபடி சூறாவளி போல் பாய்ந்தார் பிறவிப் பெருமாள். என் கடனை நீ எப்பே தீர்க்கப் போகிறே? அடுத்த பூவிலே தீர்த்துவிடுகிறேன், அடுத்த பூவிலே தாறேன்னு சொல்லி இரண்டு வருசமாக ஏமாத்திக்கிட்டு இருக்கிறே.... என்று கர்ஜித்தார்,

சங்கரலிங்கம் கூனிக் குறுகினான், தலையைச் சொறிந்தான், கைளைத் தேய்த்தான். 'காலம் சரி

தோ-5