பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74வல்லிக்கண்ணன்

 நிலைமை இவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று அவன் கற்பனைகூடச் செய்ததில்லை. இந்த விதமாக இருக்கும் என்று உண்மையில் ஒரு சிறு துணுக்குத் தெரிந்திருந்தால் கூட, அவன் விபரீதமான இந்த விளையாட்டுக்கு, வேடிக்கை பேச்சாக ஆரம்பித்து வினையாக மாறிவிட்ட பந்தயத்துக்கு இணங்கியிருக்கவே மாட்டான். அறியாத்தனமாக மாட்டிக் கொண்டாயிற்று. இனி என்ன செய்வது? இரவு பூராவும் அந்த இடத்தில் இருக்க வேண்டியதுதான். வேறு வழி கிடையாது.

விளையாட்டாக ஆரம்பித்த விவகாரம்தான் அது. ராமலிங்கமும், அவனைப் போன்று கவலையில்லாத வாலிப முறுக்கேறிய. இள வட்டங்கள் சிலரும் மலை அடிவாரக் கிராமத்துக்கு வந்தார்கள். மலைமீது உல்லாசமாக ஏறினார்கள். கரடு முரடான பாதையும், ஒருபுறம் அதலபாதாளமாய் காட்சி அளித்த மலைப்பள்ளங்களும், மறுபுறம் நெடிதுயர்ந்த கற்சுவர் என ஓங்கி நின்ற பகுதிகளும், மரங்களும், இனிய ஒலி எழுப்பியவாறே ஓடும் தண்ணீர்ச் சங்கிலிகளும் மொத்தமான இயற்கையின் ஆரவாரமற்ற கம்பீரமான எழிற் கொலுவே. அவர்களுக்கு மிகுந்த உற்சாகம் தந்தன.

சுற்றி நெளிந்து வளைந்து சென்ற பாதை வழியாக மேலே மேலே ஏறிச் செல்வது சிரமமாக இருந்தாலும் கூட, அருமையான வேடிக்கையாகவே அமைந்தது. மலை உச்சியில் நம்பிகோயிலும், ஆறும், இயற்கை வனப்பும் அவர்களுக்கு உளக் கிளர்ச்சி தந்தன.

நாகரீக உலகத்தின் அர்த்தமற்ற அவசர வேகமும் ஆழமற்ற பரபரப்பும் இல்லாத சூழ்நிலை அவர்களுக்கு இனியதாய், அற்புதமாய், சுகம்தருகிற நயமாய்த் தோன்றியது. எப்போதும் இங்கேயே இருந்துவிட முடியுமானால்... இப்படி ஒரு நினைப்பு சிலரது உள்ளத்தில் சலனமிட்டது.