பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடுத்து வைக்காதவர்



சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, 'அவனுக்கென்ன கொடுத்து வைத்தவன்!' என்று சொல்லுவார்கள், திருவாளர் நமசிவாயம் அவர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டிய அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் அல்லர்.

"பாவம், கொடுத்து வைக்காதவர்!" என்றுதான் அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள்.

திருவாளர் நமசிவாயம் தமாஷாகச் சொல்லுவார்...

‘நம்ம ஜாதக விசேஷம் அப்படி. ஐயாவாள் ஒரு திமிஷம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சீமான் பேரனாக விளங்கியிருப்பேன். சொத்தும் சுகமும் சகல பாக்கியங்களும் பிறக்கும் போதே எனக்குக் கிடைத்திருக்கும். ஆனால் எங்க ஊரிலேயே அப்படிப்பட்டவன்.கொடுத்து வைத்தவன் ஒருவன் இருக்கிறான். நான் பிறந்த அதே நாளில், ஆனால் நான் பிறந்த நேரத்துக்கு இரண்டு நிமிஷம் முன்னாலே பிறந்தவன் அவன். அதுதான் தொலையட்டும். நான் இரண்டு நிமிடம் தாமதித்துப் பிறந்திருக்கக் கூடாதோ? அப்படிப் பிறந்திருந்தால், நான் ஒரு சினிமா நட்சத்திரம் ஆகியிருப்பேன். புகழும், பணமும், பகட்டான வாழ்வும், எனக்கு வந்து சேர்ந்திருக்கும். அதுக்கும் நான் கொடுத்து வைத்திருக்கவில்லை!"

இதைக் கூறிவிட்டு அவர் அவுட்டுச் சிரிப்பு உதிர்ப்பார். அது விரக்தியும் வேதனையும் கலந்த சிரிப்பா?