பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84வல்லிக்கண்ணன்


பாஸ் செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை நமசிவாயத்துக்கு இருந்தது. எல்லாப் பாடங்களையும் 'ஒரு கை பார்த்து', கேள்விகளுக்கு உரிய பதில்களை 'வெளுத்துக் கட்டி ஜமாய்த்திருந்தார்' அவர். ஆனாலும் பரீட்சையில் தேறியவர்கள் பட்டியலில் அவர் எண் இல்லாமல் போய்விட்டது.

அதற்காக நமசிவாயம் சிறிதும் வருத்தப்படவில்லை, 'கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!' என்று ஒதுக்கிவிட்டார். இதிலும் தமாஷ் செய்வதில் உற்சாகம் கண்டார்.

'பரீட்சைகள் மூலம் யாருடைய திறமையையும் எடை போட்டுவிட முடியாது. பரீட்சையில் தேறியவர்கள் எல்லாரும் அற்புதமான புத்திசாலிகள் என்றும், பெயில் ஆகிறவர்கள் சுத்த மண்டுகங்கள் என்றும் எண்ணினால் அது அறியாமைதான். பரீட்சை விடைத் தாள்களைத் திருத்துகிற அண்ணாத்தைகள் எல்லாரும் சரியானபடி எல்லாப் பேப்பர்களையும் வாசித்து, நியாயமான மார்க்குகளைத் தருவதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை.

எட்டாவது வகுப்பு படித்த போது எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. ஒரு பரீட்சையில் நான் மிகச் சரியான விடைகள் எழுதியிருந்தேன். எப்பவும் நான் பிரைட் ஸ்டூடன்ட்தான். ஆனால் எனக்கு இருபத்து மூன்று மார்க்தான் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழில் மண்டுவான ஒரு பையன், தப்பும் தவறுமான விடைகள் எழுதியிருந்தவன், எழுபது மார்க் வாங்கியிருந்தான். பல மாணவர்களுக்கும் இது அதிசயமாகவே பட்டது. அதனால் சார்வாளிடமே இரண்டு பேப்பர்களையும் காட்டி, இது எப்படி, ஏன் என்று கேட்டார்கள். அவர் என் தாளிலுள்ள பதில்களைப் படித்தார். அடடே, ரொம்பவும் சரியாக இருக்குதே என்றார், பிறகு மறுபடி