பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் ஒரு தனிப்பிறவி



நாவலாசிரியர் கனவுப் பிரியன் தாலில் வந்த ஒரு கடிதத்தைப் படித்துப் படித்துப் பரவசமுற்றார். ஒரு பெண் எழுதிய கடிதம் அது.

புகழ்பெற்ற நாவலாசிரியரான அவருக்கு எத்தனையோ பேர் எழுதுவது வழக்கம்தான். பெண்களும் எழுதியிருக்கிறார்கள். அவருடைய படைப்புகளை புகழ்ந்து பாராட்டுவார்கள். சிலர் குறை கூறுவார்கள். ஒரு நாவலின் அந்தப் பாத்திரம் இப்படி நடந்து கொள்ளாமல் இன்ன மாதிரி நடந்து கொண்டிருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று சில பேர் ஆலோசனைகள் கூறுவார்கள்.

அன்று வந்த கடிதம் வித்தியாசமானது. அதை எழுதியவள் பெயரே வித்தியாசமானதாகத்தான் இருந்தது. சிநேகவல்லி.

"ஆகா, என்ன அழகான பெயர்! இனிமையான பெயர்! புதுமையான பெயர்!" என்று அவர் மனம், சுவை நிறைந்த மிட்டாயை ரசிக்கிற நாக்கு போல், அதை சுவைத்து இன்புற்றது.

ஆரம்பம் வழக்கம் போல்தான் இருந்தது. உங்கள் நாவல்களை ரசித்து மகிழ்ந்தவள் நான் என்று தொடங்கி, அவருடைய நாவல்களின் பெயர்களை அடுக்கி, கதைமாந்தரின் தன்மைகளை வியந்து பாராட்டியிருந்தாள்.