பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90வல்லிக்கண்ணன்


"நீங்கள் என்ன நினைப்பீர்களோ, ஏது கருதுவீர்களோ என்றுதான் இதுவரை எழுதவில்லை. எழுதாமல் இருந்தால் பித்துப் பிடித்துவிடும் என்று தோன்றவே எழுதுகிறேன். நீங்கள் கற்பனை ஞாயிறு. உங்கள் பொன் ஒளிக் கதிர் இந்த எளிய தும்பைப் பூ மீது படாதா என்று ஏங்குகிறேன். உங்கள் விசால இதயத்தின் குளுமையான அன்புப் பனித்துளி என்மேல் படியாதா என்று அண்ணாந்து நிற்கும் அபலைப் புல் நான்" என்று எழுதியிருந்தாள் அந்தப் பெண்.

நாவலாசிரியர் கனவுப் பிரியன், தனது வழக்கத்துக்கு மாறாக, உடனடியாக பதில் எழுதி அனுப்பினார். சிநேகவல்லி என்ற பெயரைப் புகழ்ந்து பாராட்டி மகிழத் தவறவில்லை.

அவள் பண்பு இப்படி அமையும் என முன்பே அறிந்தவர்கள் போல அவருடைய பெற்றோர்கள், அவளுக்குப் பொருத்தமாக சிநேகவல்லி என்று பெயரிட்டிருந்ததை வியந்து பாராட்டினார், மூன்றாவது கடிதத்தில்,

நட்புடன் குழைந்து, பிரியத்தைக் குழைத்து, அன்பாகக் கடிதங்கள் எழுதும் இனிய பெயருள்ள பெண்ணுக்குக் கடிதங்கள்கூடவா எழுதக் கூடாது என்று அவர் மனம் பேசியது. ஆகவே, கணவுப் பிரியன் கடிதங்களில் விளையாடினார். தமாஷ் பண்ணினார். சீண்டினார். சிரிக்க வைத்தார். அவருக்கு சிநேகாமீது காதல் ஏற்பட்டு விட்டதாகவே தோன்றியது.

மகாகவி மண்ணின் மைந்தன் ரசமான பேர்வழி, மண்ணின் மைந்தன் என்பது எப்படி அவரே அவருக்கு வைத்துக் கொண்ட பெயரோ, அதே மாதிரித்தான் 'மகாகவி' என்ற பட்டத்தையும் அவராகவே அவருக்கு சூட்டிக்கொண்டார்.