பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96வல்லிக்கண்ணன்


"இப்படிப் பலருக்கும், பெயர் பெற்ற அநேகருக்கு, ஆசையாக எழுதி, சமயம் பார்த்து அன்பளிப்புகள், பணம், பொருள் என்று தட்டிப் பறிக்கலாம் என்பது உங்கள் உள்நோக்கமாக இருந்திருக்குமோ?" என்று கேட்டார், கவிஞர்.

"ஐயோ, அவ்வளவு மட்டமாக என்னை நினைக்க வேண்டாம்" என்றாள் அவள். அழத் தொடங்கி விட்டாள்.

இப்போது கவிஞர்பாடு சங்கடமாகிவிட்டது. அவளை எப்படி தேற்றுவது, அவள் அழுகையை எப்படி நிறுத்துவது என்று புரியாமல் தவித்தார்.

சிநேகவல்லி தானே தன்னைத் தேற்றிக் கொண்டு, மெதுமெதுவாகத் தன் கதையை சொன்னாள். வாழ்வின் சோகம்தான். அவளுக்கு கல்யாணமாகவில்லை. சமூகக் கொடுமைகள்தான் காரணம். அவள் எவ்வளவோ ஆசைப்பட்டாள்: கனவுகள் வளர்த்தாள்: இன்பமயமான எதிர்காலம் சித்திக்கும் என்று எதிர் பார்த்தாள். நிகழ்காலம் சுட்டெரிக்கும் கோடையாக நீண்டு கொண்டிருந்தது. ஏமாற்றம் அவளைக் கருக்கியது. பைத்தியக்காரத்தனமாக - விளையாட்டுப் - போக்கில்- அவள் இதில் ஈடுபட்டாள். தனக்கும் காதல் கடிதங்கள் வர வேண்டும், தன் மீது பிரியம் வைத்து இனிக்கும் கடிதங்கள் எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள் என்ற நிறைவு வேண்டும் என அவள் மனம் ஆசைப்பட்டது. அப்படிப்பட்ட கடிதங்கள் எழுதக்கூடும் என எண்ணித்தான் நாவலாசிரியருக்கும், கவிஞருக்கும், மற்றவர்களுக்கும் அவள் எழுதினாள். இதில் அவள் ஏமாறவில்லை. அவர்கள் சுவை மிகுந்த, இன்பரசம் தோய்ந்த கடிதங்களை அவளுக்கு அனுப்பினார்கள்.